உக்ரைனின் மரியுபோல் நகர மக்கள் தங்கள் உடைகளின் மீது கட்டாயம் வெள்ளை ரிப்பன்கள் அணிந்திருக்க வேண்டும் என ரஷ்ய துருப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை ரிப்பன்கள் அணியத்தவறும் மரியுபோல் நகர மக்கள் கொல்லப்படுவார்கள் எனவும் விளாடிமிர் புடினின் துருப்புகள் அச்சுறுத்தியுள்ளது.
ரஷ்ய ராணுவ வீரர்கள் அணியும் வெள்ளை ரிப்பன்களை மரியுபோல் நகர மக்கள் அணிந்துகொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அவர்கள் உக்ரைனிய ஸ்னைப்பர்கள் வசம் சிக்க வாய்ப்புள்ளதாகவும், இதன்பொருட்டு, மறைந்திருக்கும் ரஷ்ய ஸ்னைப்பர்கள் சுதாரித்துக்கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் மரியுபோல் நகர மேயர் தெரிவிக்கையில், அப்பாவி மக்களிடம் அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை, வெள்ளை ரிப்பன்கள் அணிய வேண்டும் என நேரிடையாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்றார்.
உக்ரைனிய மக்களை துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்குவதே அவர்களின் நோக்கம் என குறிப்பிட்டுள்ள அவர்,
மரியுபோல் நகரை உண்மையில் அவர்கள் கொலைக்களமாக மாற்றியுள்ளனர் என்றார்.
முன்னதாக, மரியுபோலில் தங்கியிருக்கும் பொதுமக்கள் மற்றும் உக்ரைன் துருப்புக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு ஈடாக ரஷ்ய போர்க் கைதிகளை ஒப்படைக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ள நிலையிலேயே ரஷ்ய துருப்புகள் வெள்ளை ரிப்பன் உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
மரியுபோல் நகரத்திலிருந்து 6,000 பேரை வெளியேற்றுவதற்கு உக்ரைன் 90 பேருந்துகளை அனுப்புவதாக அறிவித்ததால்,
மரியுபோல் நகரிலிருந்து வெளியேறுமாறு மேயர் வாடிம் பாய்சென்கோ பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரத்தின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபம் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி,
100,000 மக்கள் இன்னமும் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக கூறும் அவர், நூற்றுக்கணக்கான மக்கள் காயங்களுடன் உரிய மருத்துவ சேவை பெற முடியாமல் தவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.