டெல்லியின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஜகான்கிர்புரி பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர்களை வைத்து சட்டவிரோதமான கட்டடங்களை இடித்துத் தள்ளியதால் பதற்றம் உருவானது.
சுமார் 1500 போலீசாருடன் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர். கடந்த வாரம் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது சிலர் கல்வீசியதை அடுத்து பெரும் கலவரம் மூண்டது.
இதைத் தொடர்ந்து அப்பகுதி பதற்றம் மிக்க பகுதியாக அறிவிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர்களை இறக்கி அனுமதி பெறாத வீடுகளையும் கடைகளையும் இடிக்கத் தொடங்கினர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட முஸ்லீம் குடியிருப்பு வாசிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் கட்டடங்களை இடிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்த போதும் உத்தரவின் பிரதி கையில் கிடைக்கும் வரை நண்பகல் 12.30 மணி வரை இடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.