வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் பாதுகாப்பு ஆலோசகராக, அமெரிக்க போர் கப்பலின் கமாண்டராக பணியாற்றிய இந்திய வம்சாவளி பெண் சாந்தி சேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் பிறந்தவர் சாந்தி சேதி. இவரது தாய் கனடாவைச் சேர்ந்தவர். தந்தை இந்தியாவிலிருந்து கடந்த 1960-களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்.
சாந்தி சேதி கடந்த 1993-ம் ஆண்டில், அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார். கடந்த 2010 முதல் 2012-ம் ஆண்டு வரை யுஎஸ்எஸ் டெகாடர் என்ற அமெரிக்க போர் கப்பலின் கமாண்டராக பணியாற்றினார். இந்தியா வந்த, அமெரிக்க போர் கப்பலின் முதல் பெண் கமாண்டரும் இவர்தான்.
தற்போது அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் செயலாளராகவும், பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தொடர்பான பணிகளில் சாந்தி சேதி ஒருங்கிணைந்து செயல்படுவார். கமலா ஹாரீஸூக்கு பாதுகாப்பு தொடர்பான புதுமையான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்குவார்.
அமெரிக்க இதழ் ஒன்றுக்கு சாந்தி சேதி கடந்த ஆண்டு அளித்த பேட்டியில், “கடற்படையில் இருந்த அனுபவம், தன்னை குறைத்து மதிப்பிடக் கூடாது, தனது லட்சியத்தை மறைக்கக் கூடாது என்பதை கற்றுக் கொடுத்துள்ளது. நாம் நாமாக இருந்து வெற்றி பெறவேண்டும். மற்றவர்களை போல் இருக்க முயற்சிக்க கூடாது” என கூறியுள்ளார்.