உலான்பாடர் (மங்கோலியா),
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் மங்கோலியாவில் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவி தஹியா, பஜ்ரங் புனியா உள்ளிட்ட 30 இந்திய மல்யுத்த வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். ப்ரீஸ்டைல் மற்றும் கிரேக்க-ரோமன் பிரிவுகளில் ஆண்கள் அணியிலிருந்து 20 மல்யுத்த வீரர்கள், மகளிர் அணியைச் சேர்ந்த 10 மல்யுத்த வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்திய மல்யுத்த வீரர்கள் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் 1.28 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் நேற்று நடந்த கிரிகோ ரோமன் 67 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் சச்சின், உஸ்பெகிஸ்தானின் மக்முத் பாக்ஷிலோவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தைகைப்பற்றினார். இதேபோல் 82 கிலோ பிரிவில் இந்தியாவின் ஹர்பிரீத் வெண்கலப்பதக்கம் பெற்றார்.
ஏற்கனவே 87 கிலோ எடை பிரிவில் சுனில் குமார், 55 கிலோ எடை பிரிவில் அர்ஜுன் ஹலகுர்கி மற்றும் 63 கிலோ எடை பிரிவில் நீரஜ் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இதன் மூலம் கிரேக்க-ரோமன் பிரிவில் இந்தியா மொத்தம் 5 வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.