திருமலை: ஆந்திராவில் அமைச்சர் ரோஜாவிடம் திருடப்பட்ட செல்போனை 3 மணி நேரத்திற்குள் அதிகாரிகள் மீட்டனர். ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரம், இளைஞர் நல மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள நடிகை ரோஜா தலைமையில், திருப்பதியில் இளைஞர் நல மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகளுடன் நேற்று ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சேனட் அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர் ரோஜாவின் செல்போன் திருட்டு போனது. இது குறித்து அவரது உதவியாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு செல்போன் தேடப்பட்டது. ரோஜா சென்ற இடங்களில் தேடினர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் வாலிபர் ஒருவர் செல்போனை திருடியது தெரிந்தது. செல்போன் சிக்னல் வைத்து, ரூயா மருத்துவமனை அருகே அந்த செல்போன் திருடனை போலீசார் பிடித்தனர். பின்னர், ரோஜாவிடம் செல்போன் வழங்கப்பட்டது. 3 மணி நேரத்திற்குள் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதால், அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். வாலிபரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.