காபூல்: ஆப்கனின் வடக்குப் பகுதியில் உள்ள மசார்- இ – ஷெரிஃப் நகரிலுள்ள மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 40 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி, அந்நாட்டின் ஆட்சியை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதிலிருந்து அங்கு குண்டுவெடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறன. இந்த நிலையில், நாட்டின் வடக்குப்பகுதியில் இருக்கும் மசார்- இ- ஷெரிஃப் நகரத்தில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதி ஒன்றில் தொழுகை வேளையில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டனர், 40 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ‘இஸ்லாமிய அரசு’ எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து “மாவட்டத்தின் ஷியா மசூதிக்குள் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. 20 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்” என்று மசார் இ ஷெரிஃப் பகுதியின் தலிபான் தளபதியின் செய்தித் தொடர்பாளர் ஆசிப் வசேரி தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மேற்கு காபூலில் உள்ள உயர் நிலைப்பள்ளியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பின்னர் இந்த மசார் இ ஷெரிஃப் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. காபூலின் சுற்றுப்புறத்தில் வசிக்கும் பலர் ஷியா ஹசாரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆப்கனில் இன மற்றும் மத சிறுபான்மையினராக இருக்கும் ஷியா சமூகத்தினர் தொடர்ந்து குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர்.