சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகனம் தாக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நேரடியாக முறையிடுவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
‘பாரதப் பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் – புதிய இந்தியா 2022’ என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆளுநர் காரின் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளேன். அதைப்பார்த்துவிட்டு ஆளுநர் காரில் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று முதல்வர் கூறட்டும். இந்தியாவில் போராட்டக்காரர்களுக்கு சாலை ஓரத்திலேயே இடம் ஒதுக்கிய ஒரே முதல்வர் ஸ்டாலின்தான்.
அரசியல் செய்வது முதல்வர்தான்
மத்திய அரசை எதிர்ப்போர் பல்வேறு பெயரில் போராட வந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் ஆளுநர் வாகனம் மீது எந்த தாக்குதலும் நடந்தது இல்லை. அப்படிப்பட்ட தலைவர்கள் மற்றும் காவல்துறையினர் நம்மிடம் இருந்தனர். கருணாநிதியுடன் சித்தாந்த வேறுபாடு இருந்தாலும் அவர் இப்படி செயல்பட்டதில்லை. இந்த அரசை முதல்வர் இயக்குகிறாரா அல்லது வேறு யாரும் இயக்குகின்றனரா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் அரசியல் செய்வது முதல்வர்தான்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 24-ம் தேதி புதுச்சேரி வருகிறார். அப்போது, ஆளுநர் வாகனம் மீது நடந்த தாக்குதல் குறித்து அவரிடம் நேரில் முறையிடுவோம். எனது கடிதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். ஆளுநர் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் பேசியது கண்துடைப்பு போல உள்ளது.
வழக்கு பதிய வேண்டும்
முதல்வர் உண்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124-ன் கீழ் போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை அம்பேத்கரை வைத்து அரசியல் நடத்தியவர்கள்தான் இளையராஜாவுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். அம்பேத்கருடன் மோடியை இளையராஜா ஒப்பிட்டதில் என்ன தவறு? திருமாவளவன் என்னுடன் நேரில் விவாதிக்கத் தயாரா? ஆர்எஸ்எஸ் குறித்து அம்பேத்கர் கூறிய கருத்து தொடர்பாகவும் அவர் விவாதிக்க தயாரா? இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக கூறினால், அவரது தகுதியை அது குறைக்கும்.இளையராஜாவின் தகுதிக்கு ‘பாரத ரத்னா’வே குறைவுதான்.
தமிழில் பெயர் சூட்டுவோம்
நீட் தவிர்த்து மேலும் நிலுவையில் உள்ள 11 சட்ட மசோதாக்கள் குறித்து பேரவைத் தலைவருக்கு ஆளுநர் சில கேள்விகளை கேட்டுள்ளார். இதை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும். சட்ட மசோதா குறித்த ஆளுநர் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவர் மீது அரசு பழிபோடுவது சரியல்ல. அனைத்து மத்திய அரசு திட்டங்களுக்கும் தமிழக பாஜக இனி தமிழ்ப் பெயர் சூட்டி, தமிழ்ப் பெயரையே பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் உட்பட எந்த மொழியில் இருந்தாலும் தமிழில் பெயர் சூட்டுவோம்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
மக்களின் மனதில் மோடி: கே.பாக்யராஜ்
நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியதாவது:
நான் பெங்களூர் சென்றிருந்தபோது கர்நாடக மக்கள், அண்ணாமலை குறித்து பெருமையாகப் பேசினார்கள். நமது சாதி சனத்திடம் பெயர் எடுப்பது பெரிய விஷயமில்லை. அண்ணாமலை, பிற மொழி பேசும் மாநிலத்தில் பெயர் எடுத்தது பாராட்டத்தக்கது. பிரதமர் மோடியின் பெயர் அனைத்து மக்களின் மனதிலும் எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.