இங்கிலாந்து பிரதமர் இன்று இந்தியா வருகிறார்

லண்டன்,

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று (21-ந் தேதி) 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார்.

அவர் லண்டனில் இருந்து குஜராத் மாநிலம், ஆமதாபாத்துக்கு இன்று வந்து சேருகிறார். அங்கு முதலீடு மற்றும் வர்த்தக விஷயங்களை கவனிக்கிறார். அங்குள்ள பல்கலைக்கழகத்துக்கும் செல்கிறார். சில கலாசார இடங்களையும் பார்வையிட திட்டமிட்டுள்ளார்.

22-ந் தேதி டெல்லியில் பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொழில் அதிபர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார். அவரது இந்தப் பயணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

புறப்படுமுன் பேச்சு

இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்பாக அவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று பேசினார்.

அப்போது அவர், “இந்தியாவின் அழைப்பின் பேரில் ஆமதாபாத்துக்கும், டெல்லிக்கும் செல்கிறேன். எனது இந்த பயணத்தால் இரு நாடுகளுக்கும் இடையேயான மூலோபாய, வர்த்தக, ராணுவ உறவுகள் மற்றும் மக்களுக்கும் மக்களுக்கும் இடையேயான உறவு வலுப்படும். டெல்லியில் பிரதமர் மோடியை சந்திப்பேன். இங்கிலாந்தில் முதலீடு செய்கிற இந்திய தொழில் அதிபர்களை சந்திப்பேன். இந்தியாவில் இங்கிலாந்து முதலீடுகளை பார்வையிடுவேன்” என குறிப்பிட்டார்.

இந்தியாவுடன் முக்கிய விவாதம்

போரிஸ் ஜான்சனுடன் இந்தியா வருகிற அவரது செய்தி தொடர்பாளர், நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமரின் இந்திய பயணம், ரஷியா-உக்ரைன் நெருக்கடியில் கட்டமைக்கப்படவில்லை. இந்த பயணம் வெளிப்படையாகவே முக்கியமானது. இந்த பயணம் நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட பயணம் ஆகும். இந்தியா நல்லதொரு முக்கிய கூட்டாளி ஆகும்.

வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் பசுமை எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் கூட்டாண்மையை உருவாக்குவதற்கு இந்த பயணத்தை பிரதமர் மேற்கொள்ள விரும்புகிறார். இவை அனைத்தையும் விவாதிப்போம். ரஷியா, உக்ரைன் விவகாரம் பேச்சில் இடம் பெறும் என எதிர்பார்க்கிறோம். அதே நேரத்தில், இதில் இந்தியா ஒரு சார்பு நிலைப்பாட்டை எடுக்க நாங்கள் பாடம் எடுக்க மாட்டோம். ஒரு முக்கியமான சர்வதேச கூட்டாளியாக ஆக்கப்பூர்வமாக இணைந்து செயல்பட முயற்சிப்போம்.

தாராள வர்த்தக ஒப்பந்தம்

இரு பிரதமர்களுக்கும் இடையே கதவினை மூடிக்கொண்டு நடத்துகிற விவாதத்தில் இந்த விவகாரம் ஆதிக்கம் செலுத்துமா என்று கேட்டால், அதற்கு பதில், இது பல தலைப்பிலான விவாதங்களில் ஒன்றாக இருக்கும் என்பதுதான். வெளிப்படையாகவே ரஷியா, உக்ரைன் இந்த நேரத்தில் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய முன்னுரிமை பிரச்சினை ஆகும். இது உலகளாவிய பிரச்சினையும் ஆகும். பொருளாதாரத்தில். எண்ணெய் சந்தையில், சர்வதேச பாதகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இது பேச்சில் இடம் பெறும்.

தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு உடன்பாட்டை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு நிலையான காலக்கெடு ஆகாது. நாங்கள் அவசரப்பட மாட்டோம். இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நல்ல ஒப்பந்தத்தை ஏற்படுத்த எவ்வளவு காலம் எடுக்குமோ அவ்வளவு காலத்தை எடுத்துக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.