இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருவது அந்நாட்டிற்கு மட்டுமல்ல.உலகிற்கே நல்ல செய்தி என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 புள்ளி 2 விழுக்காடாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இது அந்த நாட்டிற்கு மட்டுமல்ல.உலகிற்கே நல்ல செய்தி என்றும் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பணிகளை ஆற்றி வருவதாக தெரிவித்த ஐஎம்எஃப் இயக்குநர், உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அளித்துள்ளதை சுட்டிக்காட்டினார். கொரோனவை இந்தியா வெற்றிகரமாக சமாளித்தது மூலம் அந்நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீண்டெழுந்ததாகவும் இதன் மூலம் உக்ரைன் போர் காரணமாக எழுந்துள்ள சூழலை தாக்குப்பிடிக்க முடிவதாகவும் ஐஎம்எஃப் இயக்குநர் தெரிவித்தார்.
ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பிற்கு இந்தியா அடுத்தாண்டு வர உள்ள நிலையில் அந்நாட்டுடன் மேலும் இணக்கமாக பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்தார். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை ஐஎம்எஃப் அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில் சீனா 4 புள்ளி 4 விழுக்காடு வளர்ச்சியும் இந்தியா 8 புள்ளி 2 விழுக்காடு வளர்ச்சியும் அடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நடப்பு ஆண்டில் உலக நாடுகளின் சராசரி பொருளாதார வளர்ச்சி 3 புள்ளி 6 விழுக்காடாக இருக்கும் எனவும் ஐஎம்எஃப் கணித்திருந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM