புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி (Redmi) நிறுவனத்தின் 10 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ரெட்மி நிறுவனத்திற்கு உலக அளவில் மிக முக்கியமான சந்தைகளில் ஒன்றாக உள்ளது இந்தியா. ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி, பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகும் விலையில் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அதன் காரணமாகவே இந்திய மக்களிடையே இந்த போனுக்கு தனி வரவேற்பு இருப்பதுண்டு. அதனால், அவ்வப்போது புதுப்புது மாடல்களை ரெட்மி அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இந்த முறை ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். ரெட்மி 10A போனுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. ரெட்மி 9 பவர் போன் சீரிஸை தொடர்ந்து இப்போது 10 பவர் வந்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
- 6.7 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிங்கிள் சிப்
- பின்பக்கத்தில் டியூயல் கேமரா. அதில் 50 மெகா பிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா.
- 5 மெகா பிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா.
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி
- டைப் சி சார்ஜிங் போர்ட், 6000 mAh திறன் கொண்ட பேட்டரி
- 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. இருந்தாலும் போன் பாக்ஸுடன் 10 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் மட்டுமே வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பின்பக்கத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 4ஜி இணைப்பு வசதி மாதிரியானவை இதில் உள்ளது.
விலை: இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ.14,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாம். இருந்தாலும் இந்தியாவில் இதன் விற்பனை எப்போது தொடங்கும் என்ற விவரத்தை ரெட்மி அறிவிக்கவில்லை.