அகமதாபாத் : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரும் இதுவே முதல்முறை. லண்டனில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அவர் வந்தார். போரிஸ் ஜான்சனை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில ஆளுநர் ஆச்சாரியா தேவ்ரத் உயர் அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர். முதல் நாளில் போரிஸ் ஜான்சன் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்த்தார்.அங்குள்ள மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அந்த ஆசிரமத்தில் காந்தி பயன்படுத்திய பொருட்களை வியப்புடன் பார்த்தார். பார்வையாளர்கள் பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார். பின்னர் காந்தியவாதிகளின் அடையாளமாக கருதப்படும், கை ராட்டையை சுழற்றி நூல் நூற்றார். அப்போது ராட்டை குறித்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சன், முதலீடுகள் மற்றும் வர்த்தக விவகாரங்கள் குறித்து பல்வேறு தரப்பினருடன் பேசுகிறார். பின்னர் அகமதாபாத் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போரிஸ் ஜான்சன் சில கலாச்சார இடங்களையும் பார்வையிட திட்டமிட்டுள்ளார். நாளை டெல்லி செல்ல இருக்கும் போரிஸ் ஜான்சன், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேசுவார்கள் என்று தெரிகிறது. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் அறிவிக்கப்பட்ட பொருளாதார தடையில் இந்தியா சேர வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் மோடியிடம் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலையில் டெல்லியில் போரிஸ் பல்வேறு தொழில் அதிபர்களையும் சந்தித்து பேசுகிறார்.