இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, இம்ரான் கானின் முந்தைய மத்திய அமைச்சரவையில் இருந்த பலர், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லலாம் என்று சந்தேகப்படும் நிலையில், அவர்களை விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டவர்களில் பட்டியலில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
முன்னாள் அரசாங்கத்தின் பிடிஐ அமைச்சர்கள் தங்கள் ஆட்சியின் போது சம்பாதித்த “ஊழல்” பணத்துடன் தப்பிச் செல்லக்கூடும் என்று ஷரீப் அரசாங்கம் நம்பும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர, அவரது சகோதரரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மற்றும் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் உட்பட தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்கள் மீதான தடைகளை நீக்கவும் ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க | புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு; இம்ரான் கட்சியின் அனைத்து எம்பிக்களும் ராஜினாமா
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் தனது முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்தார். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், வேலையின்மை, வறுமை ஆகிய பிரச்சனைகளுக்கு இம்ரான் கான் அரசு தான் காரணம் என ஷெரீப் குற்றம் சாட்டினார்.
அமைச்சரவைக் கூட்டத்தில், பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நிலைமையை பற்றி குறிப்பிட்ட ஷெரீப், இது உண்மையில் ஒரு “போர்” என்றும் கடின உழைப்பு மற்றும் நிபுணர்கள் ஆலோசனைகள் மூலம் அதை எதிர்த்துப் போராடுவேன் என்று உறுதியளித்தார்.
“அரசியலமைப்பு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் ஊழல் நிறைந்த பிடிஐ அரசாங்கத்தை அகற்றி நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளதால் இன்று மிகவும் முக்கியமான நாள்” என்று அவர் கூறினார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் 34 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சர்கள் குழுவிற்கு பாகிஸ்தானின் தற்காலிக அதிபர் சாதிக் சஞ்சரானி கடந்த வாரம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் படிக்க | இலங்கை நெருக்கடி: ஒரு கிலோ மஞ்சள் ரூ.3,853; ஒரு கிலோ பிரெட் விலை ரூ.3,583