புதுடெல்லி: இலங்கைக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என சர்வதேச செலாவணி நிதியத்திடம் (ஐஎம்எப்) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.
நமது அண்டை நாடான இலங்கை, முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.வெளிநாடுகள் மற்றும் சர்வதேச வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதையும் வட்டி செலுத்துவதையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் ஐஎம்எப்பிடம் இருந்து இந்த ஆண்டுக்கு 400 கோடி டாலர் நிதியுதவி கோரியுள்ளது.
இந்நிலையில் ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர சந்திப்பு மற்றும் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார்.
அவர், ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை சந்தித்துப் பேசினார். மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரனும் அப்போது உடனிருந்தார்.
இது சந்திப்பு குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த சந்திப்பின்போது இந்தியாவின் பொருளாதார செயல்திறன் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் குறித்தும் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
இலங்கைக்கு ஐஎம்எப் உடனடியாக நிதியுதவி அளிக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். இதற்கு இலங்கையுடன் ஐஎம்எப் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றும் என்று கிறிஸ்டலினா ஜார்ஜீவா உறுதி அளித்தார்.
அமெரிக்கா வந்துள்ள இலங்கை நிதியமைச்சர் அலி சாப்ரி செவ்வாய்க்கிழமை நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது இலங்கை பொருளாதார நிலைமை குறித்து இவரும் விவாதித்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.