டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து குடியேறி அமைதியை சீர்குலைப்பதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக ஏற்கெனவே முதல்வர் புஷ்கர் சிங் தாமி அளித்த பேட்டியில், “உத்தராகண்ட் மாநிலத்துக்கு தனி கலாச்சாரம் உள்ளது. அதை பாதுகாக்க வேண்டும். அதற்காக, உத்தராகண்டில் வந்து குடியேறிய பிற மாநிலத்தவர்கள் பற்றிய விவரங்களை சரிபார்க்கும் பணியை தொடங்க உள்ளோம். சந்தேகத்துக்கு இடமான நபர்கள் பற்றி தெரியவந்தால் அவர்கள் பின்னணி குறித்து ஆராயப்படும். அவர்களைப் போன்றவர்கள் உத்தராகண்ட்டில் தங்கி அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய முயற்சிப்போம்” என்றார்.
இந்நிலையில், உத்தராகண்டில் வந்து குடியேறியுள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்கள், பின்னணி குறித்து சரிபார்க்கும் பணியை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.
அங்கீகாரம் இல்லாமல் தங்கியுள்ளவர்களை சரி பார்க்கவே பிற மாநிலத்தவர்கள் பற்றிய விவரங்களை சரிபார்க்கும் பணி நடைபெறும் என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், சார்தாம் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கவே இந்நடவடிக்கை என்று அரசு தெரிவித்துள்ளது.