உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரை கண்டித்து, உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள் அளித்தல் போன்ற உதவிகளை செய்து வருகின்றன. மேலும், இந்தப் போரில் ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்க படைகள் நேரடியாக களத்தில் இறங்காது, ஆனால் உக்ரைனுக்குத் தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் அமெரிக்க அளிக்கும் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அளிக்கும் அமெரிக்கா உள்ளீட்ட அனைத்து நாடுகளையும் ரஷ்யா எச்சரித்து வந்தது.
இந்த நிலையில் வடமேற்கு ரஷ்யாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் பகுதியில், `சர்மாட்’ எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை சோதனையை ரஷ்யா நேற்று வெற்றிகரமாக செய்துள்ளது. இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சர்மாட் ஏவுகணை சோதனையின் வெற்றி குறித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், “மிகத் தனித்துவமான இந்த ஆயுதம் ரஷ்யப் படைகளின் போர் திறனை இன்னும் அதிகப்படுத்தும். மேலும் வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து ரஷ்யாவின் பாதுகாப்பையும் இது உறுதி செய்யும். அதுமட்டுமில்லாமல் பூமியில் உள்ள எந்த இலக்குகளையும் தாக்கக்கூடியது இந்த சர்மாட். இனி ரஷ்யாவை எச்சரிக்க முயற்சிப்பவர்களை இது இரண்டு முறை சிந்திக்கவைக்கும்” என நேற்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சர்மாட் உலகின் மிக நீண்ட தூர இலக்குகளையும் அழிக்கக்கூடிய மிக சக்திவாய்ந்த ஏவுகணை என்றும், இந்த ஏவுகணை, அணுசக்தி பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது என்பதால் இது ரஷ்யாவின் அணுசக்தி படைகளின் போர் திறனையும் அதிகரிக்கும்” என்று கூறப்பட்டிருந்தது.