சென்னை: “ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்களின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோபம் வரத்தான் செய்யும்“ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பாரதிதாசனின் படத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஜனநாயக நாட்டில் ஒரு கருத்துக்கு எதிர்கருத்து தெரிவிப்பது, அதைக் கேட்காதபோது, இதுபோன்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது எல்லாம் மரபுதான். நாம் தமிழர் கட்சியே இதுபோன்ற போராட்டங்களை செய்துள்ளது. பிரதமர் வருகையின்போது கருப்புக் கொடியெல்லாம் காட்டியிருக்கிறோம். வழக்குகள் கூட பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பாஜகவின் ஆளுநர் அவர். எனவே அந்த சம்பவத்தை அவர்களுக்கான லாபமாக, அரசியலாக மாற்றப் பார்க்கின்றனர். தமிழர்கள் அவ்வளவு அநாகரிகமானவர்களோ, வன்முறையாளர்களோ கிடையாது. ஆந்திராவில் 20 தமிழர்களைச் சுட்டுக்கொன்று மரக்கட்டையுடன் போட்டபோதுகூட எதுவும் செய்யவில்லை. போராடினோம், அவ்வளவுதான். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோதுகூட நம்முடைய உடலில் தீயிட்டுக் கொளுத்தி இறந்துபோனமே தவிர, சிங்களர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. அதுதான் நம்முடைய மரபு. காரணம், ஆகப் பெரும் ஜனநாயகவாதிகள் தமிழர்கள்.
நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைத்தால், அதனை ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டும். அது அவருடைய கடமை. அதனை அனுப்பாமல் வைத்திருக்கும்போது கோபம் வரத்தான் செய்யும். 7 தமிழர் விடுதலைக்காக நாங்கள் எவ்வளவோ காலமாக போராடிகிறோம். நீங்க அதை ஓரமாக வைத்தால், நாங்கள் போராடத்தான் செய்வோம். எனவே, ஆளுநர் மீது தாக்குதல் நடத்தக்கூடிய தமிழர்கள் நாங்கள் இல்லை” என்றார்.
மேலும், குறிச்சாங்குளம் கோயில் பிரச்சினை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகனுக்கு இல்லாத தகுதி, அமைச்சர் எ.வ.வேலுக்கு உள்ளதா? எதற்காக அவருக்கு பொதுப்பணித்துறை வழங்கப்பட்டது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.