மும்பை: கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல் திட்டம் 75ன் கீழ் ஆறு நீர்மூழ்கி கப்பல்களை கடற்படையில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நான்காவது நீர்மூழ்கி கப்பல் கடந்த 2020ம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டு விட்டது. ஐந்தாவது நீர்மூழ்கி கப்பலின் சோதனைகள் கடந்த பிப்ரவரியில் தொடங்கின. இந்நிலையில், ஆறாவது கப்பலான ஐஎன்எஸ் வாக்ஷீர் நேற்று கடற்படையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஒன்றிய அரசுக்கு சொந்தமான மசகான் டாக் என்கிற கப்பல் தயாரிப்பு நிறுவனம், இந்த நீர்மூழ்கி கப்பலை கட்டமைத்துள்ளது. பாதுகாப்பு துறை செயலர் அஜய்குமார் ஐஎன்எஸ் வாக்ஷீரை தொடங்கி வைத்து அறிமுகம் செய்து வைத்தார். இந்த கப்பல் ஒரு ஆண்டுக்கும் மேல் விரிவான மற்றும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, போரிடுவதற்கு ஏற்ப முழுமையான தகுதி வாய்ந்தது என்பது உறுதி செய்யப்படும். முதல் வக்ஷீர் நீர்மூழ்கி கப்பல் கடந்த 1974ம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது. பின்னர் 1997ம் ஆண்டு கடற்படை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது. வாக்ஷீர் அதன் முந்தைய ரகத்தின் சமீபத்திய நவீனமயமாகும்.