நவி மும்பை: பரபரப்பாக கடைசி பந்து வரை சென்ற ‘டி-20’ லீக் போட்டியில் தோனியின் அசத்தல் ஆட்டம் கைகொடுக்க சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்தது. தொடர்ச்சியாக 7வது தோல்வியை பெற்ற மும்பையின் ‘பிளே-ஆப்’ கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது.
நவி மும்பை, டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடந்த ‘டி-20’ கிரிக்கெட் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணி, ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை அணியை சந்தித்தது. சென்னை அணியில் மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக டிவைன் பிரிட்டோரியஸ், மிட்சல் சான்ட்னர் தேர்வாகினர். மும்பை அணியில் பேபியன் ஆலன், முருகன் அஷ்வின், டிமால் மில்ஸ் நீக்கப்பட்டு டேனியல் சாம்ஸ், ஹிரித்திக் ஷோக்கீன், ரிலே மெரிடித் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் ரவிந்திர ஜடேஜா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
முகேஷ் அசத்தல்:
மும்பை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முகேஷ் சவுத்தரி வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் கேப்டன் ரோகித் சர்மா (0) அவுட்டானார். ஐந்தாவது பந்தில் இஷான் கிஷான் (0) போல்டானார். முகேஷ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி தனது ரன் கணக்கை துவக்கிய சூர்யகுமார் யாதவ், மிட்சல் சான்ட்னர் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து மிரட்டிய முகேஷ் ‘வேகத்தில்’ பிரேவிஸ் (4) ‘பெவிலியன்’ திரும்பினார். மும்பை அணி 23 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
சூர்யகுமார் ஆறுதல்:
முகேஷ் பந்தில் திலக் வர்மா ஒரு பவுண்டரி அடித்தார். மறுமுனையில் மகேஷ் தீக்சனா பந்தை சூர்யகுமார் சிக்சருக்கு பறக்கவிட்டார். ‘பவர்-பிளே’ ஓவரின் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 42 ரன் எடுத்திருந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 24 ரன் சேர்த்த போது சான்ட்னர் ‘சுழலில்’ சூர்யகுமார் (32) சிக்கினார்.
திலக் அரைசதம்:
ஜடேஜா வீசிய 11வது ஓவரில் திலக் வர்மா ஒரு சிக்சர் விளாசினார். ஜடேஜா, சான்ட்னர் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ஹிரித்திக் ஷோக்கீன் (25), டுவைன் பிராவோ பந்தில் அவுட்டானார். தீக்சனா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட போலார்டு (14) பெரிய அளவில் சோபிக்கவில்லை. டேனியல் சாம்ஸ் (5) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய திலக், பிரிட்டோரியஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் அடித்தார். பிராவோ வீசிய கடைசி ஓவரில் அசத்திய உனத்கட், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது. திலக் (51), உனத்கட் (19) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் முகேஷ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
ராயுடு நம்பிக்கை:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. டேனியல் சாம்ஸ் வீசிய முதல் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் (0) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய சாம்ஸ் ‘வேகத்தில்’ மிட்சல் சான்ட்னர் (11) வெளியேறினார். அடுத்து வந்த அம்பதி ராயுடு, சாம்ஸ், பும்ரா பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். மெரிடித் வீசிய 5வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த ராபின் உத்தப்பா, உனத்கட், ஹிரித்திக் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இவர், 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தோனி பவுண்டரி:
ஷிவம் துபே (13) சோபிக்கவில்லை. ராயுடு (40) நம்பிக்கை தந்தார். கேப்டன் ஜடேஜா (3) ஏமாற்றினார். உனத்கட் பந்தில் சிக்சர் அடித்த பிரிட்டோரியஸ், பும்ரா வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டன. உனத்கட் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் பிரிட்டோரியஸ் (22) அவுட்டானார். அடுத்த பந்தில் பிராவோ ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய தோனி, 4வது பந்தில் பவுண்டரி அடித்தார். ஐந்தாவது பந்தில் 2 ரன் எடுத்த தோனி, கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தோனி (28), பிராவோ (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
எட்டாவது முறை
ஐ.பி.எல்., அரங்கில் கடைசி பந்தில் அதிக முறை வெற்றி பெற்ற அணிகளுக்கான பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்தது. இதுவரை 8 முறை கடைசி பந்தில் ‘சேஸ்’ செய்து வெற்றி பெற்றது. அடுத்த நான்கு இடங்களில் மும்பை (6 முறை), ராஜஸ்தான் (4), பஞ்சாப் (3), பெங்களூரு (3) அணிகள் உள்ளன.
முதல் அணி
ஐ.பி.எல்., அரங்கில் முதல் 7 போட்டியில் தோல்வியை சந்தித்த முதல் அணியானது மும்பை. இதற்கு முன், டில்லி (2013), பெங்களூரு (2019) தொடர்ச்சியாக முதல் 6 போட்டியில் தோல்வியை தழுவி இருந்தன.