குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வட்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி வட்கம் அருகில் உள்ள பலன்பூர் அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த பொது நேற்று இரவு 11:30 மணிக்கு கைது செய்யப்பட்டார்.
இவரை கைது செய்ததற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று ஜிக்னேஷ் மேவானியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாதுராம் கோட்ஸே குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் ஜிக்னேஷ் மேவானி ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவிட்டதாகவும் அது தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இருப்பினும், அந்த ட்வீட் தற்போது நீக்கப்பட்டுள்ளதால் அதில் என்ன கூறியிருந்தார் என்பது தெரியவில்லை.
பலன்பூரில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட ஜிக்னேஷ் மேவானி அங்கிருந்து அகமதாபாத் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அசாம் மாநிலம் கவுகாத்தி-க்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் அகமதாபாத் விமான நிலையத்தில் குவிந்து ஆர்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஜிக்னேஷ் மேவானி கைது விவகாரம் குஜராத் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.