குஜராத், மராட்டியம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் ஆபத்து ..ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #PowerShortageInIndia

டெல்லி : இந்தியாவின் ஒட்டு மொத்த மின்தேவையில் 53%-ஐ அனல்மின் நிலையங்களே தரும் நிலையில்,தற்போது நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு மின்சார உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குஜராத், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் மின்வெட்டு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் மொத்தம் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 100 அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. ஒட்டுமொத்தத்தில் 6.7 கோடி டன் நிலக்கரி கையிருப்பு அவசியம் என்ற நிலையில், தற்போது 2.3 கோடி டன் மட்டுமே இருப்பில் உள்ளது.தமிழ்நாட்டில் தூத்துக்குடி உட்பட நாட்டின் பல்வேறு அனல்மின் நிலையங்கள் நிலக்கரி பற்றாக்குறையால் தடுமாறுகின்றன. சத்தீஸ்கரில் பல அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி சப்ளையை ஒன்றிய அரசு குறைத்துவிட்டது அல்லது நிறுத்திவிட்டது என்றே அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் குற்றம் சாட்டியுள்ளார். மின்சாரம் உற்பத்தியில் அனல் மின் நிலையங்களையே அதிகம் சார்ந்துள்ள இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடும் அதன் எதிரொலியாக மின்வெட்டும் ஆண்டுதோறும் வாடிக்கையான ஒன்றாகவே மாறி வருகிறது.ஒன்றிய அரசின் மின்சாரம், நிலக்கரி, ரயில்வே ஆகிய 3 துறைகளுக்கு இடையே போதிய ஒத்துழைப்பு இல்லாண்மையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கோல் இந்தியா உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் போதிய நிலக்கரியை வெட்டி எடுத்தாலும் கூட அவற்றை ரயில்கள் மூலம் அனல்மின் நிலையங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சுணக்கம் காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால், குஜராத், மராட்டியம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்கள் வரும் நாட்களில் மின்சார தட்டுப்பாட்டால் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இந்த மின்வெட்டை கருப்பொருளாக கொண்டு, ட்விட்டர் #PowerShortageInIndia என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மின் வெட்டு குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.