வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: உக்ரைனில் புதிதாக கட்டிய தனது வீட்டை ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்துள்ளதை பார்த்த அந்த வீட்டு உரிமையாளர், வெடிகுண்டு வீசி அழிக்குமாறு தனது நாட்டு ராணுவத்திடம் கூறியுள்ளார். அதனை ஏற்று உக்ரைன் ராணுவமும் வெடிகுண்டு வீசியுள்ளது.
கடந்த பிப்.,24 முதல் ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால் உக்ரைன் சீர்குலைந்துள்ளது. தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. அங்கு நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் ஆண்ட்ரி ஸ்டவ்நிட்சர் என்பவர், கீவ் நகரில் புதிதாக வீடு கட்டியுள்ளார். உக்ரைன் தாக்குதலை துவங்கியதும், போலந்திற்கு சென்று விட்ட அவர், அங்கு இருந்தவாறே, கீவ் நகரில் உள்ள வீட்டை , அங்கிருந்த வெப் கேமரா மூலம் கண்காணித்தார். அப்போது, தனது வீட்டை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதுடன், கீவ் நகரில் தாக்குதல் நடத்துவதற்கான மையமாக பயன்படுத்துவதும் ஸ்டவ்நிட்சருக்கு தெரியவந்தது. ஆயுதங்களையும் குவித்து வைத்திருந்தது அவருக்கு தெரியவந்தது. தனது தாய்நாட்டை தாக்குவதற்கு, தனது வீட்டை ரஷ்யா பயன்படுத்துவதை விரும்பாத அவர், தனது வீட்டை வெடிகுண்டு வீசி அழித்துவிடும்படி உக்ரைன் ராணுவத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: தனது வீட்டை ராணுவ நடவடிக்கைக்காக பயன்படுத்துவது வேதனை அளித்தது. நான் போலந்து சென்றுவிட்டாலும் எனது பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு தான் இருந்தனர். அவர்களை ரஷ்ய ராணுவத்தினர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர். பக்கத்து வீடுகளில் இருந்து லேப்டாப்கள், மொபைல்போன்கள், டிவிக்கள் ஆகியவற்றை திருடி கொண்டு வந்து இங்கு வைத்தனர். இது மனதிற்கு வேதனை அளித்தது. வீட்டில் ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதை வைத்து கீவ் நகரை தாக்கி வந்தனர். உக்ரைன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக என்னால் முடிந்ததை செய்தேன். ஐரோப்பாவின் பாதுகாப்பை நாங்கள் தான் பாதுகாக்கிறோம் என நினைக்கிறேன் எனக்கூறியுள்ளார்.
ஸ்டவ்நிட்சர் கோரிக்கைப்படி, உக்ரைன் ராணுவத்தினர், அவரது வீட்டின் மீது வெடிகுண்டு வீசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Advertisement