குறைபிரசவம் கருத்து : மன்னிப்பு கேட்டார் பாக்யராஜ்
சென்னை : குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என பேசிய தன் பேச்சுக்கு பாக்யராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்.
தமிழக பா.ஜ., சார்பில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பேசும் போது, 'மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்' எனக் கூறினார். இவரது பேச்சு சர்ச்சையான நிலையில், தன் பேச்சுக்கு பாக்யராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி: நான் பங்கேற்ற நிகழ்ச்சியில் 'குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்' என நான் கூறிய வார்த்தை தவறான அர்த்தத்தை உருவாக்கி விட்டதை அறிந்து, அதிர்ந்தேன். மாற்றுத்திறனாளிகளுக்கும் குறை பிரசவத்தில் பிறந்தவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. கிராமத்தில் ஓரிரு மாதத்தில் முன் பிறந்தவர்களை குறை பிரசவம் என்பவர், அவர்களிடம் எந்த குறையும் இருக்காது. மாற்றுத்திறனாளிகள் மீது எனக்கு அக்கறை உண்டு. நான் தவறாக பேசியதாக நினைத்தால், புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
நான் பா.ஜ.,வை சேர்ந்தவன் அல்ல. தமிழில் படித்து, வளர்ந்து தமிழ் தான் எனக்கு சோறு போடுகிறது. ஆரம்பத்தில் இருந்தே திராவிட இயக்க தலைவர்களின் கருத்துக்களை கேட்டே வளர்ந்தேன். என் படமும் திராவிட கருத்தையே வலியுறுத்தி வந்தது. இனியும் திராவிட இயக்க கருத்துக்களுடனேயே என் பயணம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.