திருவனந்தபுரம்: கேரளாவில் அதிவேக ரயில் பாதைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை போலீஸ்காரர் பூட்ஸ் காலால் மிதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை 550 கிமீ தொலைவுக்கு ரூ.64,000 கோடி செலவில் அதிவேக ரயில் பாதை அமைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இந்தத் திட்டத்திற்காக சர்வே கற்கள் பதிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நடைபெறும் இடங்களில் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் சில இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் சர்வே கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று திருவனந்தபுரம் அருகே கணியாபுரம் என்ற இடத்தில் சர்வே கற்களை பதிப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சென்றனர்.அப்போது அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சமயத்தில் அங்கு இருந்த கணியாபுரம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த ஷபீர் என்ற போலீஸ்காரர் பூட்ஸ் காலால் போராட்டக்காரர்களை மிதித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க திருவனந்தபுரம் எஸ்பி திவ்யா கோபிநாத் உத்தரவிட்டுள்ளார்.