கேரளாவில் வரும் மே 1 ஆம் தேதி முதல் பேருந்து, டாக்ஸி மற்றும் ஆட்டோ கட்டணங்களை உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதை அடுத்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் வரும் மே 1 ஆம் தேதி முதல் பேருந்து, டாக்ஸி மற்றும் ஆட்டோ கட்டணங்களை உயர்த்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கேரளாவில் அரசுப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 8 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோக்களின் குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக அதிகரித்துக் கொள்ள ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஆயிரத்து 500 குதிரை திறன் கொண்ட கனரக வாகனங்களின் குறைந்தபட்ச கட்டணம் 200 ரூபாயில் இருந்து 225 ரூபாயாகவும், கூடுதல் கிலோ மீட்டர்களுக்கு 17 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 10 முதல் 15 ரூபாய் வரை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பல மாநிலங்களும் பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசனை நடத்தி வரும் நிலையில், கேரளா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM