கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டாக்டர் பினுலால் சிங். இவரின் தலைமையில் மார்த்தாண்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு எதிராக போட்டி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றதுடன், காங்கிரஸ் தலைவர் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 7 கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஆனால், வட்டார, நகர தலைவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்க மாவட்ட தலைவருக்கு அதிகாரம் இல்லை. மாநில தலைமை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு தெரியப்படுத்தி அவர்கள் மூலமாகத்தான் நீக்க வேண்டும். எனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லாது என கே.எஸ். அழகிரி அறிக்கை விட்டிருந்தார்.
இது கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோபமான காங்கிரஸ் மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் என்பவர், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை எதிர்த்து பேட்டி கொடுத்திருந்தார். “கட்சியை எதிர்த்து வேலை செய்பவர்களை நீக்காமல் இருந்தால் கட்சி எப்படி வளரும். தலைவர் பதவிக்கே தகுதியற்றவர் அழகிரி” என சாடியிருந்தார் ஆர்.எஸ்.ராஜன். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.ராஜனை கட்சி பொறுப்பில் இருந்து விடுவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் மாநில விவசாய அணி தலைவர் பவன்குமார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்.எஸ்.ராஜன், “காமராஜர் கட்டிய சத்தியமூர்த்தி பவனை புரோக்கர்களின் கூடாரமாக மாற்றிவிட்டார் அழகிரி. தேர்தலுக்காக சீட்டுக்களை பேரம்பேசி விற்கிறார். பதவி வேண்டும் என்றால் அங்குள்ள சில புரோக்கர்களை அணுகவேண்டிய நிலை உள்ளது. அழகிரியை மாநில தலைவர் பதவியில் இருந்து அகற்றும் வரை ஓயமாட்டேன்” என சபதம் போட்டிருக்கிறார். பத்துபேரை கட்சியில் இருந்து நீக்கியதால் கோபமாக கேள்வி கேட்ட ஆர்.எஸ்.ராஜன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 10 நிர்வாகிகளை நீக்கியது செல்லாது என மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கூறியதை அடுத்து மேற்குமாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமைக்கு நேரில் சென்று விளக்கம் கொடுத்திருக்கிறாராம். இதுபற்றி கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம், “கட்சி தலைமை அறிவித்த பேரூராட்சி தலைவர் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்குமாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் குரல் எழுந்தது. அப்போது அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினருமான தம்பி விஜயகுமார், நிர்வாகிகளை நாமே சஸ்பெண்ட் செய்துவிட்டு தலைமக்கு கடிதம் கொடுக்கலாம் என ஆலோசனைக் கூறினர்.
அதை அடுத்தே 7 கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் நீக்கப்பட்டனர். பின்னர் கட்சி தலைமை நீக்கியது செல்லாது என்பதால் மாவட்ட தலைவர் சென்னை சென்று நடந்த சம்பவங்களை விளக்கி கூறிவிட்டார். அடுத்த மாதம் 10-ம் தேதி நடக்கும் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் 10 பேரும் நீக்கப்பட உள்ளனர்” என்றனர் சில நிர்வாகிகள்.
இதுபற்றி மேற்கு மவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங்கிடம் பேசினோம், “கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்த நிகழ்வு குறித்து மாநில தலைமைக்கு விளக்கம் கொடுத்துவிட்டேன். அதற்காக ஆர்.எஸ்.ராஜன் மாநில தலைவரை தவறாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியது. அது கண்டிக்கத்தக்கது” என்றார்.