‘கே.ஜி.எஃப்’ படத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சுதா கொங்கரா – மீண்டும் ஒரு உண்மைக் கதை

நடிகர் யஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப்.’ படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், புதிய படம் ஒன்றை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த, 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப். 1’ மாபெரும் வரவேற்பு பெற்றது. இதையடுத்து ‘கே.ஜி.எஃப் 2′. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த 14-ம் தேதி வெளியான இந்தப் படம் எதிர்பார்ப்புகளையும் மீறி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை செய்து வருகிறது.

இந்தத் திரைப்படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில், ‘சலார்’ படத்தையும் இந்த நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும்நிலையில், இந்தப் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுதா கொங்கரா, ‘துரோகி’, ‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’ ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார். இதில், ‘இறுதிச்சுற்று’ மற்றும் ‘சூரரைப் போற்று’ நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

image

தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்துள்ள இயக்குநர் சுதா கொங்கரா, ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை கேப்டன் கோபிநாத் வாழ்க்கையை தழுவி எடுத்திருந்தார். இந்நிலையில் இந்தப் படமும் ஒரு உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதாக தயாரிப்பு குழு அறிவித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை தற்போது இந்தி ரீமேக் செய்யும் பணியில், சுதா கொங்கரா ஈடுபட்டுள்ளநிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சில உண்மை கதைகள் சரியான தருணத்தில் சொல்லப்பட வேண்டியவை. எங்களின் அடுத்தப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் என்பதை அறிவிப்பதில் பெருமைக் கொள்கிறோம். எங்களது எல்லா படங்களைப் போன்று இந்தப் படத்தின் கதையும் இந்திய அளவில் ஈர்க்கும் என்று உறுதியாக நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படம் ‘கே.ஜி.எஃப்’ போன்று பான் இந்தியா படமாக உருவாகும் எனத் தெரிகிறது. படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.