கொடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்- டி.டி.வி. தினகரன்

மதுரை:
மதுரை கருப்பாயூரணி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மதுரை வந்திருந்தார். அப்போது அவரை உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விடியல் வராது. மக்கள் ஏமாறுவர் என்று நாங்கள் தேர்தல் நேரத்தில் பிரசாரம் செய்தோம். தி.மு.க ஆட்சி என்றாலே தமிழகத்திற்கு இருண்ட காலம் என்பது வரலாறு. தி.மு.க. ஆட்சி தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறை வேற்றப்படவில்லை.
ஜெயலலிதா விரும்பிச் சென்று வந்த இடம் கொட நாடு. அங்கு நடந்த கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்.
சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசல் காரணமாக 2 பேரின் உயிர்கள் பலியாகி உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா நடந்ததால் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இது போன்ற அசம்பாவித நிகழ்வுகள் நடக்காமல் கவனமாக இருந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் எதிர்க்கட்சி என்பதற்காக எல்லா வி‌ஷயங்களுக்கும் ஆளுங்கட்சியை குறை சொல்ல வேண்டியது இல்லை.
அதி.மு.க.வை கைப்பற்றுவதற்காகவே அ.ம.மு.க தொடங்கப்பட்டு உள்ளது. கட்சியை கைப்பற்றுவது என்றால் யானை குதிரை படைகளோடு சென்று அபகரிப்பது அல்ல. ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம். இழந்ததை மீட்டு எடுப்போம். அப்போது தான் ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிலை நிறுத்த முடியும்.
கடந்த கால தேர்தல் தோல்விகளை கடந்து தமிழக மக்களின் ஆதரவோடு, அ.தி.மு.க.வை மீட்டெடுக்கும் பணிகளை செய்து வருகிறோம். ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை கைப்பற்றி சசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்குவோம்.
தமிழக அரசியலை பொறுத்தவரை ஒரு சிலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். இல்லையென்றால் எதிராக இருப்பார்கள். அதற்கு சினிமா கலைஞர்களும் விதிவிலக்கு அல்ல.
முசிறியில் சசிகலாவை வரவேற்ற ஒரு சிலர் அந்த காரணத்துக்காக கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. அவர்கள் பெயரை தவறாக பயன்படுத்தியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அ.தி.மு.க.வை கைப்பற்றும் வி‌ஷயத்தில் சின்னம்மா ஜனநாயக வழியில் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் நிச்சயமாக மேல்முறையீடு செய்வார்.
அ.ம.மு.க தொண்டர்கள் கொள்கை பிடிப்போடு உள்ளனர். ஒரு சிலர் சுயநலத்திற்காக கட்சி மாறி இருக்கலாம். ஆனால் லட்சக்கணக்கான தொண்டர்கள் இன்னும் அப்படியே உள்ளனர். எனவே ஒரு சில நிர்வாகிகள் விலகியதால் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எங்களின் இயக்கம் அரசியல் சார்பு உடையது. தனிநபர் கம்பெனி அல்ல. எனவே கடைசி மூச்சு உள்ளவரை அ.தி.மு.க.வை மீட்டெடுக்க நானும், தொண்டர்களும் போராடுவோம்.
வாரிசு அரசியல் என்பது எந்த கட்சியில் தான் இல்லை? அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க.வை மீட்டெடுத்து வாரிசு அரசியலை சரிசெய்வோம். தமிழகத்தில் இருந்து ஒருவர் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டால் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.