Summer drinks in tamil: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் இந்த நாட்களில் நாம் குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், இயற்கை பானமான சர்பத் தினமும் பருகி வரலாம். சர்பத்தில் நன்னாரி சர்பத், எலுமிச்சை சர்பத் என பல வகைகள் உள்ளன. அதில் ‘குலுக்கி சர்பத்’ மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இந்த குளுகுளு குலுக்கி சர்பத்தை நம்முடைய வீட்டிலேயே எளியமுறையில் எப்படி தயார் செய்யலாம் என இன்று பார்க்கலாம்.
குலுக்கி சர்பத் தயார் செய்ய தேவையான பொருட்கள்:
சப்ஜா விதைகள் – 1 ஸ்பூன்,
எலுமிச்சை பழம் – 2,
பச்சை மிளகாய் – 2,
புதினா இலைகள் – 10 -15
உப்பு – 2 சிட்டிகை,
சர்க்கரை – 2 ஸ்பூன்,
சோடா – 1 கப்
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு.
குலுக்கி சர்பத் சிம்பிள் செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை 1/2 டம்ளர் அளவு தண்ணீரில் 15 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர், பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும். தொடர்ந்து எலுமிச்சம் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். 1 எலுமிச்சம் பழத்தை 8 துண்டுகளாக வெட்ட வேண்டும் என்பதை மனதில் கொள்ளவும்.
இப்போது ஒரு அகலமான பாத்திரம் அல்லது ஜக் எடுத்து அதில் ஊற வைத்து தயாராக இருக்கும் சப்ஜா விதை, வெட்டி வைத்திருக்கும் பச்சை மிளகாய், எலுமிச்சை பழத்துண்டுகள், புதினா, உப்பு, சர்க்கரை எல்லாப் பொருட்களையும் ஒன்றாக சேர்க்கவும். இவற்றுடன் 1/2 எலுமிச்சம் பழ சாறை பிழிந்து விடவும்.
கடைசியாக சோடா உப்பு, தேவைப்பட்டால் ஐஸ் சேர்த்து நன்றாக கலக்கவும் அல்லது மூடி போட்டு நன்றாக குலுக்கவும்.
நாம் சேர்த்துள்ள சர்க்கரை கரையும் வரை கலந்த பின்னர், அவற்றை வடிகட்டாமல் அப்படி ஒரு கிளாஸில் ஊற்றவும்.
இப்போது நீங்கள் குளுகுளு குலுக்கி சர்பத் தயார். அவற்றை நீங்கள் பருகி மகிழலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“