ஒடிசா மாநிலம் திக்கிரி கிராமத்தில், கோயிலுக்கு நன்கொடை தரமறுத்த பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை, கிராமசபைத் தலைவர் சமேலி ஓஜா என்பவர் ஊர் மக்கள் முன்னிலையில் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கடந்த செய்வாய்க்கிழமையன்று மார்சகாய் காவல் நிலையத்துக்குச் சென்ற அந்த பட்டியலினத்தவர், “கோயிலை புதுப்பிக்கவேண்டி கோயில் கமிட்டியினர் என்னிடம் நன்கொடை கேட்டனர். நான் நன்கொடை தரமறுத்ததற்கு முதலில் என் குடும்பத்தை ஊரைவிட்டு வெளியேற்றிவிடுவோம் என மிரட்டினர்.

மீண்டும் அடுத்த நாள், கிராமசபைத் தலைவரின் அழைப்பின்பேரில் கோயில் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்டேன். அப்போது கிராமசபைத் தலைவர் சமேலி ஓஜா, என்னை எச்சிலில் மூக்கை தேய்க்கச் சொல்லி கொடுமைப்படுத்தினார்” என்று சமேலி ஓஜா உட்பட 4 பேர் மீது புகாரளித்தார்.
இதையடுத்து திக்கிரி கிராமத்துக்குச் சென்ற போலீஸார், குற்றம்சாட்டப்பட்ட சமேலி ஓஜா உட்பட 4 பேர் மீது பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து நேற்று பேசிய மார்சகாய் காவல் ஆய்வாளர் பி.கே.கனுங்கோ, “இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வோம்” எனக் கூறினார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் கிராமத்தலைவர் சமேலி ஓஜா, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்றும் கூறினார்.