சீனத் தூதுவர் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதி  

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஏப்ரல் 21ஆந் திகதியாகிய இன்றைய தினம் சீனத் தூதுவர் கி சென்ஹொங் அவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

தூதுவரை வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையில் முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு முன்னரே இலங்கைக்கான சீனாவின் தொடர்ச்சியான உதவிகளைப் பாராட்டினார். சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையில் அமைக்கப்பட்ட சீன நினைவுச் சின்னங்களையும் நினைவு கூர்ந்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ள எரிசக்தித் தட்டுப்பாடு குறித்தும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தூதுவருக்குத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் நிதி உதவி மற்றும் இலங்கையின் கடனை மறுசீரமைத்தல் போன்றவற்றிற்காக நடைபெற்று வரும் கலந்துரையாடல் உட்பட, தற்போது நிலவுகின்ற சூழ்நிலையை உடனடியாக சமாளிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்து தூதுவருக்கு விளக்கிய அமைச்சர் பீரிஸ், குறிப்பாக இக்கட்டான நேரத்தில் நிதியமைப்பிற்கான மேலதிக உதவிகளை நல்குமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பிலும் பெய்ஜிங்கிலும் உள்ள சீனத் தூதரகம் இலங்கையில் உருவாகிவரும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சீனத் தூதுவர் தெரிவித்தார். சீன அரசாங்கத்தின் நேரடி ஆதரவு, பிராந்திய அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் சீனாவின் ஆதரவு உட்பட சாத்தியமான எல்லா வழிகளிலும் சீன அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்று தூதுவர் கி உறுதியளித்தார்.

5000 டொன் அரிசி (முன்னர் அறிவிக்கப்பட்ட 2000 டொன்களுடன்), மருந்துகள், உற்பத்திப் பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் உட்பட, இலங்கைக்கு 200 மில்லியன் ரென்மின்பி பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு சீனா சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது. மேலும், யுனான் மாகாணம் 1.5 மில்லியன் ரென்மின்பி பெறுமதியான உணவுப் பொதிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

சீனாவின் உறுதியான ஆதரவுக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இலங்கையின் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலின் போது, மக்கள் பரிமாற்றம், பலதரப்பு மன்றங்களிலான ஆதரவு, வறுமை ஒழிப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பின் போது வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீன தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஏப்ரல் 21

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.