கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியை சேர்ந்தவர் 24 வயது வாலிபர். இவர் சென்னையில் தங்கி படித்து வருகிறார்.
கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அந்த வாலிபருக்கு சமூகவலைதளம் மூலம் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணும் சென்னையில் தங்கி தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
2 பேரும் அடிக்கடி சமூக வலைதளத்தில் பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் பரஸ்பரம் தங்கள் செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டு, மணிக்கணக்கில் பேசி வந்தனர்.
அப்போது அந்த வாலிபர், பெண்ணிடம் உங்களை பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து 2 பேரும் நேரில் சந்தித்து பேசினர்.
அப்போது அந்த வாலிபர், பெண்ணிடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நாம் இருவரும் திருமணம் செய்து சந்தோஷமாக வாழலாம் என தெரிவித்துள்ளார்.
இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 2 பேரும் ஒரே வீட்டில் கடந்த 6 மாதமாக ஒன்றாக வசித்து வந்தனர். அப்போது அந்த வாலிபர் இளம்பெண்ணிற்கு உடல் ரீதியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு வாலிபர், எனது தந்தை வெளிநாட்டில் இருந்து வருகிறார். அவரை பார்த்து நம் காதலை தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கி வருகிறேன் என கூறி சென்றார்.
ஆனால் வெகு நாட்களாகியும் அவர் திரும்பி வரவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண், நேராக கேரள மாநிலம் மஞ்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.
அங்கு காதலன் வீட்டிற்கு சென்ற அவர், வாலிபரின் பெற்றோரிடம் தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறும் கூறினார். ஆனால் அவர்கள் பேச்சை கேட்க மறுத்து வீட்டிற்குள் சென்று விட்டனர்.
இதையடுத்து அந்த பெண் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறி வாலிபரின் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையறிந்ததும் அந்த பகுதி மக்கள் அங்கு குவிந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மஞ்சேரி போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்தார். ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வாலிபர் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதற்காக வீட்டிற்குள் சென்றனர். அப்போது அங்கு யாரும் இல்லை. அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை மஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.