சென்னை: “கரோனா தொற்று வழிமுறைகளை பின்பற்றாவிடில், தமிழகத்துக்கும் டெல்லியின் நிலைமை வரலாம்” என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவத் துறை செயலாளர் நேரில் ஆய்வு செய்தார். இதன்பிறகு அவர் அளித்த பேட்டியில், “19-ம் தேதி ஐஐடியில் முதல் கரோனா தொற்று பதிவானது. 20-ம் தேதி 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை ஐஐடியில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 300 மேற்பட்டவர்களுக்கு சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலை ஆய்வுக்கு வந்தபோது பலர் மாஸ்க் அணியவில்லை.
அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவில்லை. யாருக்காவது அறிகுறி இருந்தால் உடனடியாக சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினசரி சோதனையை 25,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை எக்ஸ்இ கரோனா இல்லை. ஐஐடியில் எடுக்கப்பட்ட மாதிரி மரபியல் சோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐஐடியில் 12 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 40 வரை செல்ல வாய்ப்பு உள்ளது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிடில் நமக்கும் டெல்லி போன்ற நிலை வர வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறிகுறி இருந்தால் உடனடியாக சோதனை செய்ய வேண்டும். 3 நாட்கள் கழித்து சோதனை செய்ய வரக் கூடாது. ஐஐடியில் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர்” என்று மருத்துவத் துறை செயலர் தெரிவித்தார்.