டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த (ஏப்ரல் 16) சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்பொழுது இந்து, இஸ்லாமிய பிரிவினரிடையே பெரும் கலவரம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பிரச்னையை அடிப்படையாக கொண்டு ஜஹாங்கீர்புரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதையொட்டி இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் அதிகாரிகளால் திட்டமிட்டு எடுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் கட்டட இடிப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் வீடுகளை அகற்ற உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், டெல்லி ஜஹாங்கிர்புரியில், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி வீடுகள் இடிக்கப்படுவதை அறிந்தவுடன், உடனடியாக, இடிப்புப் பணியை நிறுத்திட நிதிமன்ற உத்தரவு நகலுடன் அவ்விடத்திற்கு விரைந்து சென்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டது. இது தொடர்பாக பேசிய அவர், “மத்திய அரசு வகுப்புவாத சிந்தனையுடன் புல்டோசர் அரசியல் செய்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி அதிகாரிகள் கட்டடங்களை இடித்து வருகின்றனர்” என்றார்.
நீதிமன்ற உத்தரவை மீறி ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அதிகாரிகள் செய்ததாக ஏப்ரல் 20 புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பிருந்தா காரத் வழக்கு தொடுத்துள்ளார். அந்த மனுவில், “நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அதிகாரிகள் மதியம் 12.25 மணி வரை இடிக்கும் பணியை நிறுத்தவில்லை. மக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்வதற்கான உரிமை மற்றும் வேலை வாய்ப்பு, தங்குமிட உரிமைகள் மீறப்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.