புதுடெல்லி: பண மோசடி தொடர்பான வழக்கில் தமக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய கோரிக்கை மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘தமக்கு இடைக்காலமாக வழங்கப்பட்ட ஜாமினில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். ஏனெனில் தான் ஒரு அரசியல் சார்ந்த நபர் என்பதால் தன்னை நாடி வரும் மக்களுக்கு பணி செய்ய முடியாத சூழல் உள்ளது. மேலும் இதுதொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்கையும் விரைந்து பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.