புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 58ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 21-04-2022) இராவணன் குடிலில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில்,
“ஜனநாயக நாட்டில் கருத்துக்கு எதிர் கருத்து சொல்வதும், அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக கருப்புக்கொடி காட்டுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதிர்ப்பை பதிவு செய்வதும் மரபு தான். ஆளுநர் மீது கற்கள் எறிந்துவிட்டார்கள், கொல்ல முயற்சிக்கிறார்கள் என்று அரசியல் இலாபத்திற்காக பாஜக மடைமாற்றப்பார்க்கிறாகள்.
தமிழர்கள் அவ்வளவு அநாகரிகமானவர்களோ, வன்முறையாளர்களோ அல்லர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 20 தமிழர்களைச் சுட்டுக்கொன்று மரக்கட்டைகளோடு கட்டையாக போட்டபோது கூட தமிழர்கள் அறவழியில் போராடியாதைத் தவிர பெரிதாக எதுவும் எதிர்வினையாற்றவில்லை.
ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்தபோது கூட இங்குள்ள தமிழர்கள் தங்கள் மீது தீயிட்டுக்கொண்டு செத்தார்களே ஒழிய சிங்களவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை. அதுதான் தமிழர்கள் மரபு, ஏனெனில் தமிழர்கள் ஆகப்பெரும் சனநாயகவாதிகள்.
அதனால் ஆளுநர் மீது கொலை முயற்சி போன்ற குற்றச்சாட்டுகளை நான் ஏற்கவில்லை; எதிர்க்கிறேன். ஆளுநருக்கு எதிராக தமிழர்கள் நாங்கள் போராடுவதற்கு காரணம், நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானத்தைக் கிடப்பில் போட்டு வைத்திருப்பதும், எத்தனையோ ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகும் எழுவர் விடுதலையை ஒற்றைக் கையெழுத்துக்காக உறங்க வைத்திருப்பதும் தான்” என்று சீமான் தெரிவித்தார்.