அகர்தலா: திரிபுராவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பன்றிகளை மொத்தமாக கொல்ல அம்மாநில அரசு அணையிட்டுள்ளது. இந்தியாவை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் என்ற புதியவகை நோய் தற்போது பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் முதன்முறையாக அசாம் மாநிலத்தில் இந்நோய் தாக்கி உள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.அதாவது, திரிபுராவின் செபஹிஜாலா மாவட்டத்தில் உள்ள தேவிபூரில் அரசு இனப்பெருக்கப் பண்ணை ஒன்றி இயங்கி வருகிறது. அங்கு உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றிகளை கொல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கால்நடை வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பகபன் தாஸ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் நோய்த்தொற்றால் இறந்த பன்றிகளின் உடல்கள் தனியாக ஒரு இடத்தில் புதைக்கப்பட்டு, உயிருடன் இருக்கும் பன்றிகள் வேறு இடத்தில் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதுவரை பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்ததால் பல லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில கால்நடை வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பகபன் தாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.