குஜராத்தில், சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சிமாநாடு சமீபத்தில் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் மருத்துவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மோடி, “டெட்ராஸ் காலையில் என்னைச் சந்தித்தபோது நான் ‘பக்கா’ குஜராத்தியாக மாறிவிட்டதாகவும்,
தனக்கொரு குஜராத்தி பெயரை வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இப்போது இந்த மேடையிலும் தனக்கு எந்தப் பெயர் வைப்பது என்று முடிவு செய்துவிட்டேனா என்று கேட்டு அதை ஞாபகப்படுத்தினார்.
மகாத்மா காந்தியின் புண்ணிய பூமியில், ஒரு குஜராத்தியாக என்னுடைய சிறந்த நண்பரை ‘துளசிபாய்’ என்று அழைக்க விரும்புகிறேன்” என்று பேசினார். தன்னுடைய 57 வயது நண்பருக்கு மருத்துவ தாவரமான துளசியின் பெயரை வைத்தற்கான காரணத்தையும் பிரதமர் மோடியே கூறினார்.
“இந்திய ஆன்மிக பாரம்பர்யத்தை ஒருங்கிணைக்கும் விஷயமாக துளசிச் செடி விளங்குகிறது. தீபாவளியையொட்டி துளசி விவாவகம் என்ற பண்டிகையும் கொண்டாடப்படும் என்றார். துளசி என்ற பெயருக்குப் பின்னால் இருக்கும் ‘பாய்’ ஒவ்வொரு குஜராத்தியின் பெயரிலும் இருக்க வேண்டிய ஒன்று” என்றார்.
மேலும் பேசிய மோடி, “உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் முதல் எத்தியோப்பியன் மற்றும் ஆப்பிரிக்கரான டெட்ராஸ், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஆசிரியர்களை தான் மிகவும் நேசிப்பதாகத் தெரிவித்தார். குஜராத் மீது துளசிபாயின் அன்பும், அவர் குஜராத் மொழியில் பேசியதும், இந்திய ஆசிரியர்கள் மீது அவர் வைத்துள்ள மரியாதையும் தன்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தாகவும் பிரதமர் தெரிவித்தார்.
தொடர்ந்து அந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “பாரம்பர்ய மருத்துவ தயாரிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவில் விரைவில் ஆயுஷ் முத்திரை அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம் நாட்டில் ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகியவற்றின் தரமான (ஆயுஷ்) தயாரிப்புகளுக்கு நம்பகத்தன்மை கிடைக்கும். இதேபோல் பாரம்பர்ய சிகிச்சை முறைக்காக இந்தியாவுக்கு வருபவர்களின் வசதிக்காக ஆயுஷ் விசா திட்டம் விரைவில் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.