சென்னை:
தமிழகத்தில் நேற்று பல மாவட்டங்களில் கடுமையான மின்தடை ஏற்பட்டது. பல மணி நேரத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு பெரும்பாலான நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.
மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மின்வெட்டு நீண்ட நேரம் நீடித்தது. இரவு 7 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 5 மணி நேரமாக வரவில்லை.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று திணறல் ஏற்பட்டது. பல மாவட்டங்களில் நள்ளிரவுக்கு பிறகே மின்சாரம் மீண்டும் வந்தது.
மின்தடை ஏற்பட்ட மாவட்டங்களில் மக்கள் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டனர். அதற்கு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மின்தட்டுப்பாடு காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டது ஏன்? என்பதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு தலைமை அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படும் “மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம்“ திறந்து வைத்துள்ளார். அந்த சேவை மையத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இன்று (நேற்று) இரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் மின்பற்றாக்குறை ஏற்பட்டது.
இதை சமாளிக்க நமது மின்வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்துள்ளோம். தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் 4 இடங்களில் ரூ.10 கோடி மதிப்பில் அமைக்கப்படும் வணிக மற்றும் ஏற்றுமதி வசதி மையங்களில் ஒன்றை கோவையில் அமைக்க ஆவண செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை மக்கள் சார்பாக கோடி நன்றிகள்.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு நன்றிகள். இந்த மையம் உயர் தொழில்நுட்ப அலுமினியம் அச்சுவார்ப்பு இயந்திரங்கள் உள்ளிட்ட பல வசதிகளுடன் அமைக்கப்படும்.
ரூ.5.80 கோடி அரசு மானியத்துடன், கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில், அலுமினியம் அச்சு வார்ப்பு செய்யும் குறுங்குழுமத்திற்கான பொது வசதி மையம் அமைக்கப்பட ஆவண செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை மக்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்…காணாமல் போன கணவரை ஊர் ஊராக தேடி அலையும் மனைவி