இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 34 சதவீதம் பேர், நாளொன்றுக்கு வெறும் ரூ.588 வருமானத்தில் வாழ்கின்றனர் என்று உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி வெளியிட்ட பாகிஸ்தான் வளர்ச்சி புதுப்பிப்பு, இரு வருட அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் உயர்ந்து வரும் விலைவாசி, ஏழைக் குடும்பங்களை அதிகமாகப் பாதிக்கிறது. உணவு மற்றும் எரிபொருளுக்காக மட்டுமே அவர்கள் தங்கள் பட்ஜெட்டில் அதிகப் பங்கைச் செலவழிக்கும் சூழல் உள்ளது.
உலக வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஏழைகள் தங்கள் மொத்த நுகர்வில், 50 சதவீதத்தை உணவுப் பொருட்களுக்கு செலவிடுகின்றனர். நடப்பு நிதியாண்டில் உடனடி தீர்வு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், பாகிஸ்தான் பெரும் கடன் சுமைக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரித்துள்ளது.
தொடர்ந்து அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
அதிகரிக்கும் விலைவாசி, அதிகரித்து வரும் கடன் செலவுகள் மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை ஆகியவை காரணமாக தொழில் மற்றும் நுகர்வோர் நம்பிக்கை தொடர்ச்சியாக கடுமையாக சரிவை நோக்கி செல்கிறது.
2021-22 நிதியாண்டில் பணவீக்கம் சராசரியாக 8 சதவீதம் உயரும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அது 10.7 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விலைவாசி உயர்வு, எண்ணெய் மற்றும் பொருட்களின் விலை உயரும்.
தெற்கு ஆசியாவில் அதிகபட்ச விலைவாசி உயர்வு பாகிஸ்தானில் தான் நிலவுகிறது. இதனால், பாகிஸ்தானில் பெரிய அளவில் பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டிய அவசர சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய பண இறுக்கத்தை நிறைவு செய்ய, குறிப்பாக நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் அவசரமாக தேவைப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக இருந்து வந்த உள்நாட்டு அரசியல் நிச்சயமற்ற தன்மை, ஒட்டுமொத்த நிதி மற்றும் கடன் நிலைத்தன்மையை மேம்படுத்த எடுக்கப்பட்ட முக்கிய சீர்திருத்தங்களை செயல்படுத்துவதை முடக்கியது. அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மாறிவரும் வெளிப்புறச் சூழல் ஆகியவற்றால் பாகிஸ்தான் பொருளாதாரத்துக்குஅபாயங்கள் அதிகரித்துள்ளன.
2022ம் நிதியாண்டில் பாகிஸ்தானுக்கான வளர்ச்சி கணிப்பு, முன்பு கணித்தபடி மாறாமல் 4 சதவீதமாக இருக்கும். 2022 ஜூன் இறுதிக்குள், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 சதவீதமாக உயரும். முக்கியமாக எண்ணெய் மற்றும் பொருட்களின் இறக்குமதி காரணமாக இது உயரும்.
பாகிஸ்தானின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 12.9 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதியாண்டில் அது 18.5 பில்லியன் டாலராக இருக்கும். நடப்பு நிதியாண்டில் பாகிஸ்தானுக்கு 35 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வெளிநாட்டு நிதி தேவைப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் பாகிஸ்தானின் பணவீக்கம் சராசரியாக 12.7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்நாட்டின் புதிய ஆட்சியில், நிதித்துறை இணை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஆயிஷா கவுஸ் பாஷா மற்றும் நிதி மந்திரி இஸ்மாயில் ஆகியோர் அமெரிக்க கருவூல துறை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று வாஷிங்டன் செல்கின்றனர்.
இதன்மூலம், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முதிர்ச்சியற்ற பகிரங்க அறிக்கைகளால் சேதமடைந்த அமெரிக்காவுடனான உறவை சரிசெய்ய பாகிஸ்தான் முயற்சிக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்கலாம்….
வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்- இம்ரான் கான் மீது பாகிஸ்தான் அரசு புகார்