பான் மசாலா விளம்பரம் – மன்னிப்பு கேட்ட அக்ஷய் குமார்
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். சினிமாவில் எந்தளவுக்கு நடித்து சம்பாதிக்கிறாரோ, அதே அளவுக்கு விளம்பரங்கள் மூலம் கோடிகளில் கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் பான் மசாலா தொடர்பான விளம்பரம் ஒன்றில் நடித்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து, எதிர்வினையாற்றி வந்தனர். இந்நிலையில் ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் அக்ஷய்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛ரசிகர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்கிறேன். கடந்த சில நாட்களாக உங்கள் ஒவ்வொருவரின் எதிர்வினை என்னை பாதித்துள்ளது. இனி இதுமாதிரியான புகையிலை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். அந்த நிறுவனத்துடனான எனது தொடர்பை முறித்துக் கொள்கிறேன். இந்த விளம்பரத்தின் மூலம் கிடைத்த பணத்தை வேறு ஏதேனும் நல்ல விஷயத்திற்கு பயன்படுத்த எண்ணி உள்ளேன். சட்டப்பூர்வ ஒப்பந்தப்படி அந்த விளம்பரம் அதற்குரிய காலம் வரை ஒளிபரப்பாகும். அதேசமயம் இனி எதிர்காலத்தில் எனது விளம்பர தேர்வுகளில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன். அதற்கு பதிலாக நான் எப்போதும் உங்கள் அன்பையும், விருப்பத்தையும் கேட்கிறேன்.
இவ்வாறு அக்ஷய் தெரிவித்துள்ளார்.