காந்திநகர்: இந்திய பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளைப் பெற விரும்பும் வெளிநாட்டினர் எளிதாக வந்து செல்லும் வகையில் ஆயுஷ் விசா விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். மேலும், இந்திய பாரம்பரிய மருத்துவத் துறையில் முதலீடுகள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் உலக ஆயுஷ் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜூக்நாத், மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்வானந்த சோனாவால், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியவதாவது:
‘ஆயுஷ் துறையில் முதலீட்டு மாநாடு நடத்தப்படுவது இதுதான் முதல்முறை. உலக அளவில் கரோனா வேகமாக பரவிய நேரத்தில், இந்தியாவில் ஆயுர்வேத மருந்துகள் எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியது என்பதை நாம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி பல மடங்கு உயர்ந்தது. தற்போது ஆயுஷ் மருந்துகளுக்கான ஏற்றுமதி சந்தை மிகப் பெரிய அளவில் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஆயுஷ் துறையில் முதலீட்டை அதிகரிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் தேவையான முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. மருத்துவ குணமிக்க மூலிகைச் செடிகள் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளையும், ஆயுஷ் மருந்துகள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்.
ஆயுஷ் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். இந்தியாவில் 100 கோடி டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட யுனிகார்ன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. விரைவிலேயேஆயுஷ் துறையிலிருந்தும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் யுனிகார்ன் பட்டியலில் சேரும் என நம்புகிறேன்.
இந்தியாவின் ஆயுஷ் மருந்துகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் விரைவிலே ஆயுஷ் முத்திரை அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எனக்கு குஜராத்தி பெயரா..
உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் கேப்ரியாசஸ், ‘எனக்கு ஏதாவது குஜராத்தி பெயரை முடிவு செய்துள்ளீர்களா’ என்று மோடியிடம் கேட்டார். உடனே அவரை ‘துளசிபாய்’ என்று மோடி அழைத்தார். ‘இப்போதைய தலைமுறை துளசிச் செடியை மறந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் துளசிச் செடி மிகவும் பாரம்பரியமானது. இந்திய மக்கள் துளசிச் செடியை வணங்கினர். எனவே, நான் உங்களை துளசிபாய் என்று அழைக்க விரும்புகிறேன்’ என்று மோடி விளக்கமளித்தார்.