புதுச்சேரியில் ஆளுநர் மூலம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த பாஜக சதி – திருமாவளவன் குற்றச்சாட்டு

புதுச்சேரி: விரைவில் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கு ஆளுநர் மூலமாக மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகின்றன. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது என்று திருமாவளன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டு பெரியபேட் பகுதியில் அம்பேத்கரின் முழு உருவ வெங்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களைவை உறுப்பினருமான திருமாவளவன் இன்று (வியாழக்கிழமை) புதுச்சேரிக்கு வருகை தந்தார். முன்னதாக அவர் புதுச்சேரி தனியார் ஓட்டலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரி மாநில ஆட்சி நிர்வாகத்தில் பாஜகவின் தலையீடு வெளிப்படையாக தெரிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் அரசு சுதந்திரமாக இயங்கிவில்லை என்றும் தெரிகிறது. ஏற்கனவே கிரண்பேடி ஆளுநராக இருந்த போது காங்கிரஸ் அரசுக்கு எத்தகைய நெருக்கடிகளை கொடுத்தனரோ அதேபோல தற்போது என்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கும் ஆளுநர் மூலம் கடுமையான நெருக்கடிகள் தந்து கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவதற்கும் ஆளுநர் மூலம் மத்திய பாஜக அரசு சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் தகவல் வெளியாகின்றன. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமியைப் போல தற்போதைய முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாக எதிர்க்காமல் அமைதி காப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. அவர் சுதந்திரமாக ஆட்சி செய்ய வேண்டும். மத்திய அரசின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும். தமிழகம், புதுச்சேரி ஜனநாயக சக்திகள் இப்பிரச்சினையில் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று விசிக கேட்டுக் கொள்கிறது.

மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டம் பயிலும் மாணவர்கள் கியூட் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். தேசிய கல்விக் கொள்கையில் இதுவும் ஒன்று. மருத்துவக் கல்விக்கு நீட் நுழைவு தேர்வு போன்று, பட்டப் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு என்பது உள்நோக்கத்துடன் கூடிய தொலைநோக்குத் திட்டமாக தெரிகிறது. தேசிய கல்விக்கொள்கை கைவிடப்பட வேண்டும். கியூட் நுழைவுத் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வளவு விமர்சனங்கள், நெருக்கடியான சூழலிலும் சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைக்கவில்லை. ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதல்ல எங்களது கோரிக்கை, ஆளுநரே கூடாது என்பது தான். எந்த மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஆளுநர் பதவி கூடாது. அதற்கு மம்தா பானர்ஜி முதல்வராக இருக்கும் மேற்கு வங்க அரசு சான்றாக இருக்கிறது.ஆளுநர் உடனே நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

குடியரசுத் தலைவரும் அதனை உடனே சட்டமாக்கிவிடுவார், என்ற எதிர்பார்ப்பில் அல்ல, அவரும் கூட மத்திய அரசின் என்ன ஓட்டத்துக்கு ஏற்பத்தான் முடிவெடுப்பார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனாலும் ஆளுநர் தான் சட்டப்பூர்வமாக ஆற்ற வேண்டிய கடமையைக் கூட செய்யாமல் தமிழக அரசுக்கு நெருக்கடியை தர முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. ஆளுநர் சென்ற காரின் மீது கருப்புக் கொடி வீசினார்கள், தாக்குதல் நடத்த முயற்சித்தார்கள் என்ற அற்பமான அரசியலை பாஜக அரங்கேற்றுகிறது. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் சேவை கட்சியாக அதிமுக முழுமையாக மாறியுள்ளது.

அதிமுக, பாஜக சேர்ந்து ஆளுநர் மீது தாக்குதல் நடந்ததாக நாடக அரசியலை நடத்துகிறார்கள். இதன் மூலம் திமுக அரசுக்கு எதிரான உணர்வை கட்டமைக்கப் பார்க்கின்றனர். இதுவும் கண்டனத்துக்குரியது. இதனை அவர்கள் கைவிட வேண்டும். வெறுப்பு அரசியலை நாடு முழுவதும் பாஜக கட்டமைத்து வருவது மிகமிக ஆபத்தானது. ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்தால் மட்டுமே அவர்களின் இந்த போக்கை தடுக்க முடியும். ஆகவே அகில இந்திய அளவில் தேர்தலுக்காக ஒருங்கிணைய வேண்டும் என்பதைவிட, இந்த தீங்கிலிருந்து காக்க ஒருங்கிணைய வேண்டும்.

புதுச்சேரிக்கு அமித்ஷா வருகையின் போது கருப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளதாக எதிர்கட்சியினர் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதனை அறவழியிலும், கட்டுப்பாடுடனும் நடத்த வேண்டும். சங்பரிவார் கும்பல் ஊடுருவ வாய்ப்புள்ளது. அது நடைபெறாத வகையில் போரட்டத்தை நடத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.