வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
முன்னணி சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனம் விவாதங்களையும், உரையாடல்களையும் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதாவது ‛டுவிட்டர் ஸ்பேசஸ்’ (Twitter Spaces) எனப்படும் கருத்து பரிமாறும் களம் மூலம் ஒரே நேரத்தில் பலரும் இணைந்து கருத்துகளை கேட்கலாம். பொழுதுபோக்கு, சமூகம், விழிப்புணர்வு போன்றவை குறித்தும் விவாதிக்கப்படுகிறது. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தங்களது கருத்துகளை ஒரே நேரத்தில் பல நூறு பேரிடம் கொண்டு சேர்க்க டுவிட்டர் ஸ்பேசஸ் உதவுகிறது.
அந்த வகையில் வரும் ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் புத்தக வாசிப்பு பழக்கம் குறைந்து இணைய பயன்பாடுகள் அதிகரித்து வரும் சூழலில், புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக லண்டனில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த உமா என்பவர் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளார். அதாவது, உலக புத்தக தினத்தில், எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து அன்றைய நாள் முழுவதும் புத்தகம் சார்ந்த வெவ்வேறு தலைப்புகளில் டுவிட்டர் ஸ்பேசஸில் தொடர்ந்து 24 மணிநேரமும் விவாதம் மற்றும் கருத்து பரிமாற்றம் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஏப்.,22ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் (ஏப்.,23) நள்ளிரவு 12 மணி வரை டுவிட்டர் பயனர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், புத்தக விரும்பிகள் பங்கு கொள்ளலாம்.
இது தொடர்பாக நிகழ்ச்சியை வழிநடத்தும் உமா (டுவிட்டரில் உமை என்ற பெயரில் உள்ளார்) கூறியதாவது: டுவிட்டரில் உமை என்ற பெயரில் புத்தகங்களை மையமாக கொண்டு ‛ஸ்பேஸ் மாரத்தான்’ வரும் ஏப்.,23ம் தேதி நடத்துகிறோம். இதில், புத்தகங்கள் மீது அதிக நாட்டம் கொண்டவர்கள், எழுத்தாளர்கள், புத்தக வெளியீட்டாளர்களை ஒருங்கிணைத்து 24 மணி நேரமும் ‛ஸ்பேஸ் மாரத்தான்’ நிகழ்ச்சி நடத்திட திட்டமிட்டுள்ளோம். 20க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பேசவுள்ளனர்.
புத்தகத்தை மையமாக கொண்டு ஒருங்கிணைந்த உலக அளவிலான டுவிட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சி நடப்பது இதுவே முதன்முறை. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என உலகம் முழுதும் இருந்து அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளோம். புத்தக வாசிப்பை அதிகப்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். எனது டுவிட்டர் பக்கத்தில் ( @umayasho ) இது சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். புத்தக விரும்பிகள், ஆர்வலர்கள் இணைந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சி நிரல்:
டுவிட்டர் பக்கத்தின் முகவரி: https://twitter.com/umayasho/status/1516837694235713536?s=21&t=jhfqiI0ib_PNUUVh5lykLg
Advertisement