சென்னை: இலவசப் பேருந்து திட்டத்தில் பெண்கள் 91.85 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெண்கள் அனைவரும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட நகரப் பேருந்துகளின் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் தற்போது வரை பெண்கள் 91 கோடி பணயங்களை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், “பாதுகாப்பான பயணம் என்பது பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பிறரை சார்ந்து இல்லாமல் பெண்கள், கல்விக் கூடங்களுக்கும், பணிக்கும் தாமகவே சென்று வருவதால் கட்டணமில்லா பேருந்து வசதி சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் பயணத்திற்கான அன்றாடச் செலவுகள் குறைக்கப்பட்டு கல்வி உணவு, உடை போன்ற அத்தியாவசிய செலவுகளை அவர்கள் மேற்கொள்வதற்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் 91.85 கோடி பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.