செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் எதிர்ப்புக்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டு, பிரதமர் மகிந்த ராஜபக்சே
அரசமைப்புத் திருத்தத்தை முன்மொழிந்துள்ளார்.
அரசமைப்பின் 20 வது திருத்தத்தை நீக்கிவிட்டு 19 வது திருத்தத்தின் ஷரத்துகளை மீண்டும் அரசியலமைப்பின் 21 வது திருத்தமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த முன்மொழிவை செய்தார் மகிந்த ராஜபக்சே.
19ஆவது திருத்தத்தில் என்ன இருந்தது?
2015 ஏப்ரலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 19வது திருத்தச் சட்டம் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவினால் அவசரமாக நிறைவேற்றப்பட்டது.
பிரதமரை தனது விருப்பப்படி பதவி நீக்கம் செய்யும் அதிபரின் அதிகாரத்தை அது நீக்கியது.
இலங்கை அரசமைப்பின் 46 (2) மற்றும் 48 ஆவது ஷரத்துகளை திருத்துவதன் மூலம், பிரதமர் மரணம், ராஜினாமா அல்லது வேறுவிதமாக பதவியில் இருப்பதை நிறுத்தினால் அல்லது அரசாங்க கொள்கை அறிக்கையை நாடாளுமன்றம் நிராகரித்தால் மட்டுமே அமைச்சரவையை கலைக்க முடியும்.
பிரதமரின் ஆலோசனையை கேட்டு அமைச்சரவையை கலைக்கும் அதிகாரத்தை அதிபர் கொண்டிருப்பதால் அதிபரின் அதிகாரத்தையும் அந்த திருத்தம் கட்டுப்படுத்தியது.
எனினும், இது அப்போதைய பிரதமர் விக்ரமசிங்கேவால் தனது சுயநல தேவைகளுக்காகவும், உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டதாகவும் கடும் விமர்சனமும் எழுந்தது.
பொதுவாக ஒரு மசோதா தாக்கல் செய்யப்படும்போது அது இரண்டு கட்ட பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு ஆலோசனை செய்த பிறகே அமல்படுத்தப்படும்.
ஆனால், விக்ரமசிங்கே பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே விவாதித்துவிட்டு அதை அமல்படுத்தினார்.
அப்போது, தமிழக உறுப்பினர்கள் மொழிபெயர்க்குமாறு கோரினர்.
அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு சில முக்கிய அதிகாரங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் அது இந்திய குடியரசுத் தலைவருக்கு இருக்கும் அதிகாரத்தை போன்றதாகவே இருந்தது.
20வது திருத்தத்தில் என்ன இருந்தது?
அக்டோபர் 2020 இல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 வது திருத்தமும் சர்ச்சைக்குரியதாக இருந்தது.
19வது திருத்தத்திற்கு (19A) மாற்றியமைக்கப்பட்ட 20வது திருத்தம் (20A), மீண்டும் அதிபருக்கு பல அதிகாரங்களை வழங்க வகை செய்தது.
இரட்டைக் குடிமக்களுக்கு தேர்தல் உரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய ஷரத்து நிறைவேற்றப்பட்டது.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. 20A மீதான விமர்சனங்கள் மிகவும் கடுமையாக இருந்தன.
ஏனெனில் இது ஒரு தனிநபரின் கைகளில் அதிகபட்ச அதிகாரங்களை குவிப்பதன் மூலம் சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையை சீர்குலைக்கும் ஒன்றாகக் காணப்பட்டது.
பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல பழமைவாத மற்றும் தீவிர பௌத்த குழுக்களும் 20A ஐ எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்களைக் கொண்டிருந்தன.
இதில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக்க அனுமதிக்கும் ஷரத்து உட்பட சர்ச்சைக்குரிய ஷரத்துகள் இருந்தன.
போராட்டத்தை கட்டுப்படுத்த 21வது திருத்தம்
21ஆவது அரசமைப்பு திருத்தம் மூலம் அதிபரிடம் இருக்க சில முக்கிய அதிகாரங்கள் நீக்கப்படும்.
முப்படைகளும் அதிபரின் கீழ் தான் செயல்படுவார்கள். நிர்வாகம், அமைச்சரவை மட்டும் பிரதமருக்கு செல்லும்.
இது இந்தியாவில் இருப்பது போன்ற முறை தான். கொழும்பு உள்பட நாடு முழுவதும் அதிபர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.
இந்த அரசமைப்பு சட்டத் திருத்தம் மூலம் அதிபரின் நிர்வாக ரீதியிலான அதிகாரங்களை நீக்கப்படுவதால் மக்களின் கோபம் கொஞ்சம் தணியும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே எதிர்பார்க்கிறார்.
“மக்கள் மிக கவனமாக ஒழுங்கான முறையில் அமைதியாக போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை அரசால் முடக்கிவிட முடியாது. போராட்டக்காரர்களில் பெரும்பாலனவர்கள் இளைஞர்கள்தான். அரசியல் மாற்றத்துக்காக அவர்கள் போராடி வருகின்றனர்” என்கிறார் கொழும்பை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் குசால் பெரேரா.
பணவீக்கம் அதிகரிப்பு; அரசியல் பொருளாதாரத்தை பாதிக்காதது ஏன்?
இடைக்கால அரசில் பங்கு பெற மாட்டோம். பிரதமரும், அதிபரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதசா உறுதியாக இருப்பது இலங்கை அரசுக்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“