உக்ரைனின் மரியுபோல் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தரவு பீதியை கிளப்பியுள்ளது.
மரியுபோல் நகரில் அமைந்துள்ள Azovstal தொழிற்சாலை வளாகமானது உக்ரைன் துருப்புகளின் கடைசி நம்பிக்கையாக இருந்து வந்தது.
ஆனால், குறித்த வளாகத்தை மொத்தமாக மூட உத்தரவிட்டுள்ள விளாடிமிர் புடின், அந்த வளாகத்தில் இருந்து ஒரு ஈ கூட வெளியேறிவிடக் கூடாது என கட்டளையிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், உள்ளே சிக்கியிருக்கும் இராணுவத்தினர் மற்றும் குடிமக்களுக்கு உணவு அல்லது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும்,
அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள், சிறார்கள், காயம்பட்ட உக்ரைன் இராணுவத்தினர் என பலர் குறித்த வளாகத்தில் சிக்கியுள்ளதாகவும்,
அவர்களிடம் உணவு, தண்ணீர், அத்தியாவசிய மருந்து எதுவும் இல்லை எனவும் உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் மரியுபோல் நகரை கைப்பற்றுவதால் மே 9ம் திகதி முன்னெடுக்கப்படும் ரஷ்யாவின் வெற்றி தினத்தில், உக்ரைன் மீதான படையெடுப்பின் முக்கிய திருப்புமுனையாக விளாடிமிர் புடின் இதை அறிவிப்பார் என்றே கூறப்படுகிறது.
மொத்தம் 2,000 வீரர்கள் குறித்த வளாகத்தை பாதுகாத்து வருவதாக தகவல் வெளியான நிலையில்,
கடுமையான ஒரு தாக்குதலுக்கு தேவை இருக்காது என தமது பாதுகாப்பு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ள விளாடிமிர் புடின், இராணுவ நடவடிக்கைகள் அனைத்தினையும் ரத்து செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.
மேலும், Azovstal வளாகத்தில் இதுவரை ஆயுதங்களை கைவிட்டு சரணடையாத வீரர்களுக்கு இது வாய்ப்பு எனவும், அவர்கள் சரணடைந்தால், உரிய மரியாதையுடன் நடத்தப்படுவார்கள் எனவும் புடின் கூறியுள்ளார்.
மரியுபோல் நகரம் ரஷ்ய துருப்புகளிடம் வசம் சிக்குவதால், அது ரஷ்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் எனவும், ரஷ்யாவுக்கும் க்ரிமியாவுக்கும் நடுவே சர்வசாதாரணமாக சென்று வரலாம் எனவும், டான்பாஸ் பகுதிக்கு ரஷ்ய துருப்புகளால் மிக எளிதாக செல்ல முடியும் எனவும் அஞ்சப்படுகிறது.