சென்னை:
சட்டசபையில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 24 பள்ளிகள் நிறுவனங்களின் கட்டடங்கள் ரூ.2 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்
தென் மாவட்டங்களில் செவித்திறன் குறைபாடுடைய 60 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர் கல்வியில் பி.காம்., பி.சி.ஏ. பாடங்கள் ரூ.18.06 லட்சம் செலவில் அறிமுகம் செய்யப்படும்.
சென்னை மாவட்டத்தில் ரூ.1.51 கோடி செலவில், கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைக்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சுய தொழில் கடனுதவி திட்டத்தின்மூலம் அளிக்கப்படும் ரூ.25000 தொகையினை அறிவுசார் குறைபாடுடையோர், புற உலக சிந்தனையற்றோர், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் நீட்டித்து 400 பயனாளிகளுக்கு வழங்கும் வகையில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக உகந்த பதவியிடங்கள் கண்டறியப்பட்டு, பணி நியமனம் செய்வதை கண்காணிக்கும்பொருட்டு ஒரு குழு அமைக்கப்படும்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.
இதையும் படியுங்கள்… சென்னையில் 7 சாலைகளை நவீனமயமாக்க திட்டம்- தமிழக நெடுஞ்சாலை துறை முடிவு