அதிகாலை 3 மணி ரயில் சென்று கொண்டிருக்கிறது. பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மிக வேகமாகச் சென்று கொண்டிருந்த ரயில் பாலத்தை கடக்க ஆரம்பிக்கிறது. பாதி பாலம் தாண்டிய நிலையில் பெரும் சத்தத்துடன் ரயில் தடம்புரண்டது. பாதி பெட்டிகள் ஆற்றுக்குள் மூழ்கியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள், நடப்பது என்னவென்றே தெரியாமல் ஆற்றுக்குள் மூழ்கினர். தகவலறிந்து மீட்பு படையினர் விரைந்து வந்து பயணிகளை விடிய விடிய மீட்டுக் கொண்டு இருந்தனர். அனைத்து பணிகளையும் முடிவுற்ற நிலையில் கிட்டத்தட்ட 20 பயணிகள் உயிரிழந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
தகவல் சொல்லப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு வந்தார் அமைச்சர். அனைத்தையும் பார்வையிட்ட பிறகு பத்திரிகையாளரிடம் வந்தார். பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்து கேள்வி கேட்க… அவர்… “இத பாருங்க… இது ஒரு கோர சம்பவம். இதுவரை 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் தர அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேற்கொண்டு விபத்திற்கான விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தீவிர விசாரணைக்கு பிறகு விபத்துக்கான காரணம் தெரியவரும். யாரேனும் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறிவிட்டு பத்திரிக்கையாளர்கள் கேட்கும் மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார் அமைச்சர்.
மறுநாள் காலை… இடம் திருப்பூர்..
ஓய்வு பெற்ற தலைமை இன்ஜினியர் செல்வம்… வழக்கம்போல் காபி அருந்திக் கொண்டு அன்றைய தினசரி நாளிதழ் எடுத்து பார்க்க ஆரம்பித்தார். தலைப்புச் செய்தியை படித்து அவருக்குப் பெரும் அதிர்ச்சி. ரயில் விபத்து. 20 பேர் மரணம்…. அந்தப் பாலம்… அந்த வழியாக ரயில் தளவாடம்…
எல்லாம் செல்வம் தலைமையில் கட்டப்பட்டது ஏழு வருடத்திற்கு முன்னால்.. பத்திரிகையை படித்து விட்டு தன் அறைக்குள் நுழைந்தார் செல்வம். நாற்காலியில் சாய்ந்து பழைய நினைவுகளுக்கு சென்றார். ஏழு வருடங்களுக்கு முன்பு. பாலம் கட்டும் வேலையை பார்வையிட்டுக் கொண்டிருந்தார் தலைமை இன்ஜினியர் செல்வம். சிறிது நேரத்திற்கு பிறகு அங்கு வந்த உயர் அதிகாரி.
செல்வம் இங்க வாங்க என்று தனியே அழைத்துப் போய் பேசினார்..
“ செல்வம்… நேற்று அமைச்சர் போன் பண்ணார். அக்டோபர் 20ஆம் தேதி பாலத்தின் திறப்பு விழா வச்சுக்கலாம் என்றார். அன்று அவர் கட்சியின் தலைவரின் பிறந்தநாள் வருதாம். அதனால் அவர் நினைவாக திறந்து பாலத்திற்கு அவர் தலைவரின் பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்’’ என்றார் உயரதிகாரி.
அதிர்ச்சி அடைந்த செல்வம்…. “சார்.. நாம நவம்பரில் தானே திறக்க கேட்டிருந்தோம். நீங்கள் சொல்லும் தேதிக்கு இன்னும் 25 நாட்கள்தான் உள்ளது. அதுக்குள்ள எப்படி சார் முடிக்க முடியும்… அதுமட்டுமில்லாமல் எனது மகளின் திருமணம் அக்டோபர் 18-ல் வைத்து உள்ளேன். அந்த சமயத்தில் நான் ஒரு வாரம் விடுமுறை கேட்டு இருந்தேனே சார்’’ என்றார்.
“என்ன செல்வம் இது எல்லாம் நான் அமைச்சர் கிட்ட சொல்ல முடியுமா?. நீங்க ஒண்ணு செய்யுங்க உங்க பொண்ணு திருமணத்திற்கு முன்பே எல்லா வேலையும் முடித்து விட்டு ஒரு வாரம் என்ன.?? 2 வாரம் லீவு எடுத்துக்கங்க’’ என்று சொல்லிவிட்டு சென்றார் உயரதிகாரி.
ஏதும் சொல்ல முடியாமல் தவித்தார் செல்வம். அவசர அவசரமாக வேலையை முடிக்க ஆரம்பித்தார். இரவு பகலாக அனைவரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார். நாட்கள் நெருங்கியது. அக்டோபர் 15…. மனைவி கமலா போன் செய்தாள்.
“என்னங்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்து இருந்தாங்க… நீங்க எப்ப வருவீங்க என்று சம்பந்தி கேட்டாரு’’ என்றாள்.
17ஆம் தேதிகுள்ள வந்து விடுகிறேன் என்றார்.
“ஒரே பொண்ணு கல்யாணம்… அதுக்கு கூட கடைசியில் தான் வருவீங்களா’’ என்று கோபத்துடன் கேட்டு விட்டு போனை கட் செய்தாள் மனைவி.
இருக்கும் வேலை டென்ஷனில் மனைவியின் சொல் மேலும் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. 17ஆம் தேதி…. இன்னும் சில ட்ரையல் ஒட்டி பார்க்க வேண்டி இருந்தது. ஆனால் செல்வத்திற்கு நேரமில்லை. மறுநாள் மகளின் திருமணம். என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
தனக்குக் கீழ் பணியாற்றும் பணியாளர்களிடம் மேலும் ட்ரையல் பார்க்க வேண்டுமா என்று கேட்டார்.
“அவசியம் இல்ல சார்… நாம் சரியாகத்தான் வேலை பார்த்து இருக்கிறோம்’’ என்றனர்…
சரி என்று சொல்லிவிட்டு, பாலம் தயார் என்று உயர் அதிகாரிக்கு ரிப்போர்ட் கொடுத்துவிட்டார். பின்பு கிளம்பி மகள் திருமணத்தில் கலந்து கொண்டார். அக்டோபர் 20ஆம் தேதி அமைச்சர் தலைமையில் பாலம் திறக்கப்பட்டது. ஆனால் நாம் சரியாக வேலையை முடிக்கவில்லையே என அவர் மனம் உறுத்திக்கொண்டே இருந்தது., பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த நேரத்தில் தாத்தா என்று பேத்தி கூப்பிட்டவுடன் சுயநினைவுக்கு வந்தார் செல்வம்.
“தாத்தா உங்களை சாப்பிட பாட்டி வரச்சொன்னார்’’ என்று சொல்லிவிட்டு போனாள் பேத்தி.
“சரி வரேன் மா’’ என்றார்.
சாப்பிட்ட பின்பு டிவியை ஆன் செய்து செய்திகளை பார்த்து விட்டு தன் அறைக்குள் சென்று ஓய்வு எடுத்துக் கொண்டார். மீண்டும் மாலை நேரத்தில் டிவியை ஆன் செய்து செய்திகளை பார்க்க ஆரம்பித்தார். அதில் ஓர் உயர் அதிகாரி…
“முதல்கட்ட விசாரணையில் இந்த விபத்தில் மனிதத் தவறுகள் இல்லை எதேச்சையாக நடந்துள்ளது’’ என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
டிவியை ஆப் செய்துவிட்டு அறைக்குள் நுழைந்தார் செல்வம். குற்ற உணர்வு அவரை வாட்டியது. அன்று நாம் இன்னும் சில டிரையல் பார்த்து இருக்க வேண்டுமோ? என்று நினைத்துக் கொண்டே தன் அறையில் சென்று கட்டிலில் சாய்ந்து கொண்டார்… வருத்தத்திலேயே உறங்கிப் போனார்.
(மனிதர்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆதலால் முடிந்த அளவு சிறுசிறு தவறுகளை தவிர்த்துவிட வேண்டும்.)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.