புதுடில்லி: கோவிட் உருவான காலக்கட்டத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை (பி.எல்.ஐ.,) திட்டத்தின் மூலம் ஆட்டோமொபைல் உள்ளிட்ட 14 துறைகளில் ரூ.2.34 லட்சம் கோடி முதலீடு உருவாகியிருப்பதாக பல்வேறு அமைச்சகங்களிடமிருந்து பெற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு விற்பனையை விட அதிகமான விற்பனைக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை பணமாகவே வழங்கப்படுகிறது. மேலும் இதில் பயன்பெறும் இந்தியாவில் குறைந்தபட்ச முதலீட்டில் ஈடுபட வேண்டும். இந்தியாவின் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவது, அதன் மூலம் ஏற்றுமதியை அதிகப்படுத்தி தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இந்நிலையில் இத்திட்டம் 14 துறைகளில் ₹2.34 லட்சம் கோடி முதலீட்டை உருவாக்கியுள்ளதாக மத்திய அமைச்சகங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆட்டோமொபைல், வாகன உதிரிபாகங்கள், நவீன வேதியியல் செல் பேட்டரிகள், சிறப்பு எஃகு, அதிக திறன் கொண்ட சோலார் பேனல்கள் ஆகியவற்றில் அதிகபட்ச முதலீடு உருவாக்கியுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் இத்திட்டம் ரூ.28.15 லட்சம் கோடி மதிப்பிலான கூடுதல் உற்பத்தியையும், 65 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என மூத்த அரசு அதிகாரி தெரிவித்தார்.
Advertisement