DMK and BJP conflicts on hanging Modi photo on ration shop in Trichy: திருச்சியில் ரேசன் கடையில் பிரதமர் மோடி படத்தை வைக்க முயன்றதால் பாஜக மற்றும் திமுகவினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம் இடம்பெற வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்து வருகிறது. பல்வேறு அரசு அலுவலங்கள் பாஜகவினர் மோடி படத்தை இடம் பெறச் செய்ய, சம்பந்தப்பட்ட அலுவலங்களுக்கு நேரடியாக சென்று மோடி படத்தை கொடுத்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனிடையே இன்று, திருச்சி பொன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ரேசன் கடையில், பாஜக மண்டலத் தலைவர் பரமசிவம் தலைமையில் வந்த பாஜகவினர் பிரதமரின் உருவப் படத்தை அங்கு மாட்டியுள்ளனர். இதற்கு அங்கிருந்த திமுக கவுன்சிலர் ராமதாஸ் மற்றும் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், சமாதான முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள்: குறை பிரசவம் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் பாக்யராஜ்; நான் பிஜேபி கிடையாது என்றும் விளக்கம்
இதனிடையே பாஜக மண்டலத் தலைவர் பரமசிவம், திமுகவினர் தன்னை தாக்கியதாக கூறியதையடுத்து, பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட பாஜகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து திமுகவினர் பாஜக நிர்வாகிகளைக் கண்டித்து ரேசன் கடை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.